கடும் குளிரில் தெருவில் வீசப்பட்ட பச்சிளங்குழந்தையை விடிய விடிய காவல் காத்த நாய்கள்: மேற்கு வங்கத்தில் நடந்த நெகிழ்ச்சி
நவதீப்: மேற்கு வங்கத்தில் அனாதையாக வீசப்பட்ட பச்சிளங்குழந்தையைத் தெரு நாய்கள் விடிய விடிய காவல் காத்து உயிரைக் காப்பாற்றிய சம்பவம் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள நவதீப் நகரில் ரயில்வே ஊழியர்கள் குடியிருப்புப் பகுதியின் குளியலறை ஒன்றின் வெளியே, கடும் குளிர் நிலவிய நள்ளிரவு நேரத்தில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளங்குழந்தை ஒன்று அனாதையாக வீசப்பட்டிருந்தது. ஆள் நடமாட்டம் இல்லாத அந்த இடத்தில் குழந்தையைச் சுற்றித் தெரு நாய்கள் கூட்டம் ஒன்று கூடியுள்ளது. வழக்கமாக அப்பகுதி மக்களுக்குத் தொல்லை தருவதாகக் கருதப்படும் அந்த நாய்கள், அன்று இரவு முழுவதும் அந்தக் குழந்தையைச் சுற்றி அமைதியாக நின்று ஒரு பாதுகாப்பு வளையத்தை அமைத்துள்ளன.
கடும் குளிரில் குழந்தை உறைந்து போகாமலும், பிற ஆபத்துகள் நெருங்காமலும் விடிய விடிய அவை காவல் காத்துள்ளன. அதிகாலையில் குழந்தையின் அழுகுரல் கேட்டு வந்த நபர் ஒருவர், நாய்கள் சூழ்ந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். ஆனால், மனிதர்கள் வருவதைக் கண்டதும் நாய்கள் அமைதியாக வழிவிட்டன. ரத்தக்கறையுடன் காணப்பட்ட அந்தக் குழந்தையை மீட்ட மக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘நாய்களின் இந்தச் செயல் மனிதர்களுக்குப் பாடம் புகட்டுவது போல் உள்ளது’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். குழந்தையைக் அனாதையாக வீசிவிட்டு சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

