Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
South Rising
search-icon-img
Advertisement

ஈரோட்டில் 1.85 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.278.62 கோடியில் நலத்திட்ட உதவிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

பொல்லான், தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை

ஈரோடு: ஈரோட்டில் ரூ.278.62 கோடியில் 1.85 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். மொடக்குறிச்சி அருகே பொல்லான் சிலை, மணிமண்டபத்தையும், சோலாரில் புதிய பேருந்து நிலையத்தையும் திறந்து வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை, ஈரோடு மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று கோவைக்கு வந்தார். நேற்று கோவை காந்திபுரம் மத்திய சிறை வளாகத்தில் உலகத்தரத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.208.50 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவை திறந்து வைத்தார். சிறிது நேரம் நடந்து சென்றும், பேட்டரி வாகனம் மூலம் சென்றும் பூங்கா முழுவதும் சுற்றி பார்த்தார். பூங்கா வளாகத்தில் அரச மரக்கன்று நட்டார். பின்னர் பள்ளி மாணவர்கள் மற்றும் கோவையை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடினார். அங்கு நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை நேரடியாக பார்வையிட்டார்.

தொடர்ந்து கோவை புறநகர் பகுதியில் ஓராட்டுக்குப்பையில் மாற்றுத்திறனாளிகளுக்காக 4 ஏக்கர் பரப்பளவில் ரூ.2.39 கோடியில் கட்டப்பட்டுள்ள 86 வீடுகளை வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். 3 பயனாளிகளுக்கு வீட்டின் சாவிகளை வழங்கினார். பின்னர் நீலாம்பூரில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்று தங்கினார். மாலையில் தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை சார்பில், கோவை நீலாம்பூரில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில், ‘தமிழ்நாடு ரைஸிங்’ என்ற பெயரில் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இதில், ரூ.43,844 கோடி முதலீட்டில் 1 லட்சத்து 709 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், உயர்தர பம்புகள் மற்றும் மோட்டார் உற்பத்தி தொழில் மேம்பாட்டிற்காக ஆவாரம்பாளையத்தில் ரூ.14.43 கோடி மதிப்பீட்டிலும், வார்ப்புகள் மற்றும் உலோக வடிவமைப்பு மேம்பாட்டிற்காக, மோப்பேரிப்பாளையத்தில் ரூ.26.50 கோடி மதிப்பீட்டிலும் திறன்மிகு மையங்கள் அமைப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அத்துடன், 9 நிறுவனங்களில், பல்வேறு பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள

நிகழ்ச்சி முடிந்ததும் சாலை மார்க்கமாக மாலை ஈரோட்டிற்கு முதல்வர் வந்தார். அவருக்கு பல்வேறு இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஈரோடு காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் தங்கினார். பின்னர் இன்று காலை மொடக்குறிச்சி தாலுகா ஜெயராமபுரத்துக்கு சென்றார். அங்கு ரூ.4.90 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் மணிமண்டபம் மற்றும் சிலையை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். அங்கிருந்து ஓடாநிலை சென்ற அவர், தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தி, புதிதாக அமையும் சிலை பணியை பார்வையிட்டார். தொடர்ந்து ஈரோடு சோலார் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நடக்கும் அரசு விழாவில் முதல்வர் பங்கேற்றார். அங்கு ரூ.63.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் உட்பட மாவட்டத்தில் முடிவுற்ற ரூ.235 கோடி மதிப்பிலான 790 பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மேலும், ரூ.91 கோடி மதிப்பிலான 230 புதிய வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து, பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 1 லட்சத்து 85 ஆயிரத்து 304 பயனாளிகளுக்கு ரூ.278.62 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, முதல்வர் விழா பேருரையாற்றினார். மாலை 4.30 மணியளவில் சித்தோடு ஆவின் வளாகத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட, ஆவின் அமைப்பை ஏற்படுத்திய எஸ்.கே.பரமசிவம் சிலையை முதல்வர் திறந்து வைத்து, மரியாதை செலுத்துகிறார். பின்னர் சித்தோடு கொங்கு மாளிகை திருமண மண்டபத்தில் நடக்கும் திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு, கார் மூலம் கோவைக்கு சென்று, விமானம் மூலம் சென்னை செல்கிறார். முதல்வர் ஈரோடு வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

பொல்லான் குடும்பத்தினரை கவுரவித்த முதல்வர்

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் மாவீரன் பொல்லானின் கொள்ளுபேரன் வரதராஜன், அவரது மகன்கள் முருகன், வீரன், பழனிசாமி, எள்ளுபேரன் ராஜன் மற்றும் குடும்பத்தினர் சந்தோஷ்பிரியா, லட்சுமி, சந்திரலட்சுமி, கருப்பாள், வீராள், விமலா ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து, கவுரவப்படுத்தினார். அவர்களுடன் சேர்ந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். தொடர்ந்து, பூமிதான பூமியில் பயனாளிகள் நாச்சம்மாள், தனலட்சுமி, லட்சுமி, மோனிஷா, மைதிலி, கொழந்தாள், சாரதாமணி, தேவி, மல்லிகா, விஜயலட்சுமி, நாச்சாள் ஆகியோருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ.வேலு, சு.முத்துசாமி, கே.என்.நேரு, மு.பெ.சாமிநாதன், மதிவேந்தன், கயல்விழி, எம்.பி.க்கள் அந்தியூர் செல்வராஜ், பிரகாஷ், ஆதி தமிழர் பேரவை தலைவர் அதியமான் உள்பட பலர் பங்கேற்றனர்.