Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

திருப்பத்தூரில் நலவாரிய ஆய்வுக்கூட்டம் 85 தொழிலாளர்களுக்கு ரூ.32 லட்சம் நலத்திட்ட உதவி

*வாரிய தலைவர், கலெக்டர் வழங்கினர்

திருப்பத்தூர் : திருப்பத்தூரில் நடந்த நலவாரிய ஆய்வுக்கூட்டத்தில் 85 தொழிலாளர்களுக்கு சுமார் ரூ.32 லட்சம் நலத்திட்ட உதவிகளை நலவாரிய தலைவர் பொன்குமார், கலெக்டர் சிவசவுந்திரவல்லி ஆகியோர் வழங்கினர். திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் நலவாரியங்களுக்கான நலத்திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது.

இதில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்குமார், கலெக்டர் சிவசவுந்திரவல்லி ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த கூட்டத்தில் தொழிலாளர்களின் பிரச்னைகள், தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து நலவாரிய தலைவர் பொன்குமார் பேசியதாவது :

நலவாரிய பணிகள் தொடர்பாக இந்த ஆய்வுக்கூட்டம் நடக்கிறது. தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்து அதனை நிவர்த்தி செய்வது, வாரியத்தின் திட்டங்கள் மற்றும் பணப்பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது சிறப்பு அம்சமாகும். இவற்றின் மூலம் கூடுதலாக தொழிலாளர்களை வாரியத்தில் இணைப்பதற்கு வழிவகை செய்ய முடியும்.

இந்த காரணங்களால்தான் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி மாவட்ட வாரியாக ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏற்கனவே ஒருமுறை ஆய்வு செய்துள்ளோம். இதன் விளைவாக இன்றைக்கு 89 ஆயிரம் தொழிலாளர்கள் கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ளனர்.

இதில் 88 ஆயிரம் தொழிலாளர்கள் பணப்பலன் பெற்றுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது. பணியிடத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் விபத்தில் உயிரிழந்தால் அந்த குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் தொகை ரூ.8 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல பிற இடங்களில் விபத்து ஏற்பட்டு உயிரிழந்தால் ரூ.2 லட்சம், இயற்கை மரணமடைந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. இதுதவிர ஈமச்சடங்கு நிதி ரூ.250,00 ஆகவும், திருமணத்திற்கான ரூ.25000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. வீடு இல்லாத கட்டுமான தொழிலாளிகள் வீடு கட்ட ரூ.4 லட்சம் தரப்படுகிறது.

வீட்டுமனை இல்லாத கட்டுமான தொழிலாளிக்கு நகர்ப்புற வீடு கட்டும் திட்டத்தின்கீழ், வீடுகள் வழங்கப்படுகிறது. நலவாரிய உறுப்பினரின் வாரிசுகள் மாநில அளவில் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டால் ரூ.25,000ம், தேசிய போட்டியில் பங்கேற்றால் ரூ.50,000 அரப்படுகிறது. இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார். நாட்டில் தமிழகத்தில்தான் 18 வகையான வாரியங்கள் செயல்படுகிறது. இவற்றின் மூலம் ஏராளமான தொழிலாளர்கள் பயன்பெறுகின்றனர். இவ்வாறு பேசினார்.

இதையடுத்து கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை சார்பில் 35 ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.42,000/- மதிப்பீட்டில் ஓய்வூதிய உதவித்தொகை, 25 தொழிலாளர்களுக்கு ரூ.5,00,000 திருமண உதவித்தொகை, 1 தொழிலாளியின் வாரிசுதாரருக்கு ரூ.2.5 லட்சம் மதிப்பீட்டில் இயற்கை மரண உதவித்தொகை, 1 தொழிலாளியின் வாரிசுக்கு ரூ.55,000 இயற்கை மரண உதவித்தொகை, 1 பயனாளிக்கு ரூ.50,000 மருத்துவ படிப்பு உதவித்தொகையும், 1 பயனாளிக்கு ரூ.2.5 லட்சம் சாலை விபத்து மரண உதவித்தொகை, வீட்டுவசதி திட்டத்தின்கீழ் 21 பயனாளிகளுக்கு ரூ.21,00,000 வீடு கட்டுவதற்கான நிதியுதவி என மொத்தம் 85 தொழிலாளர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.31.97 லட்சம் வழங்கப்பட்டது.

இதுதவிர திறன் மேம்பாட்டு பயிற்சிபெற்ற 22 தொழிலாளர்களுக்கு சான்றிழ் ஆகியவற்றை நலவாரிய தலைவர் பொன்குமார், கலெக்டர் சிவசவுந்திரவல்லி வழங்கினர். இக்கூட்டத்தில் திருப்பத்தூர் நகரமன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ரவிஜெயராம், தொழிலாளர் உதவி ஆணையர் ராஜராஜன் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.