Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

நாளை ராமநாதபுரத்தில் நடக்கவுள்ள 13 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக மதுரை விமான நிலையம் வந்த முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்விற்காக இன்று இரவு ராமநாதபுரம் செல்கிறார். நாளை காலை நடக்கும் அரசு விழாவில் 13 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று களஆய்வு செய்து வருகிறார். அங்கு நடக்கும் அரசு விழாக்களில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். மேலும், அந்தந்த மாவட்ட திமுக நிர்வாகிகளை சந்தித்து, கட்சி வளர்ச்சி குறித்தும் உரையாடி வருகிறார்.

இதன்படி ராமநாதபுரத்தில் கள ஆய்வு மற்றும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை விமான நிலையம் வந்துள்ளார். விமானநிலையத்தில் முதல்வருக்கு மதுரை மாவட்ட திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பழமையான தேவாலயங்கள், மசூதிகள் புனரமைப்பு திட்டத்தின் கீழ், சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் கிராம இருதய ஆண்டவர் திருத்தலத்தில் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

தொடர்ந்து அங்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். நாளை காலை மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மாவட்டத்தில் முடிந்த திட்டப்பணிகள் மற்றும் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்கிறார். இதை தொடர்ந்து ராமநாதபுரம்-தேவிப்பட்டினம் இசிஆர் சாலையில் உள்ள பேராவூர் பகுதியில் காலை 10.30 மணியளவில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார். விழாவில் முடிந்த வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதை தொடர்ந்து 13 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர், ராமநாதபுரத்தில் புதிதாக ரூ.20 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய பஸ்நிலையத்தை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் மதுரை விமானநிலையம் சென்று, அங்கிருந்து சென்னைக்கு செல்கிறார்.