அமராவதி: கர்ப்பம் ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், 7 மாத கர்ப்பிணி காவலர் அகில இந்திய அளவிலான பளுதூக்கும் போட்டியில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். டெல்லி காவல்துறையில் காவலராக பணியாற்றி வருபவர் சோனிகா யாதவ் (31). இவர் கடந்த 2023ம் ஆண்டு முதல் பளுதூக்கும் வீராங்கனையாக பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில், ஆந்திர மாநிலம் அமராவதியில் அகில இந்திய காவல்துறைக்கான பளுதூக்கும் போட்டி கடந்த 17ம் தேதி நடைபெற்றது. இதில் டெல்லி காவல்துறை சார்பில் சோனிகா யாதவும் கலந்துகொண்டார். 84 கிலோவுக்கு மேற்பட்டோருக்கான எடைப்பிரிவில் பங்கேற்ற அவர், 7 மாத கர்ப்பிணியாக இருந்தபோதிலும், மொத்தம் 350 கிலோ எடையை தூக்கி அனைவரையும் பிரமிக்க வைத்தார். குறிப்பாக, 145 கிலோ டெட்லிஃப்ட், 125 கிலோ ஸ்குவாட் மற்றும் 80 கிலோ பெஞ்ச் பிரஸ் என எடைகளை தூக்கி வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
இந்த வெற்றி குறித்து சோனிகா யாதவ் கூறும்போது, ‘கர்ப்பம் என்பது பெண்ணின் இலக்குகளை அடைவதற்கு ஒரு தடையாக இருக்கக்கூடாது என்ற எண்ணத்தை நிரூபிக்கவே இதில் பங்கேற்றேன்’ என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மகப்பேறு மருத்துவரின் முறையான ஆலோசனையுடனும், நிபுணர்களின் மேற்பார்வையுடனும் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வந்ததாக அவர் கூறினார். சோனிகாவின் இந்தச் சாதனையை டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளதுடன், சமூக வலைதளங்களிலும் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
