மும்பை; இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரை வென்ற கையோடு டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன் பின்னர் இந்த ஆண்டு மே மாதம் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக முடிவு எடுத்தார். அதே வேளையில் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாட முடிவு செய்துள்ளார். இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாட இருக்கிறது. இதில் ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா விளையாடுகிறார். இதற்கான இந்திய அணியை கடந்த 4ஆம் தேதி தேர்வுக்குழு அறிவித்தது. ஒருநாள் அணியின் கேப்டனாக தொடர்ந்து வந்த ரோகித் சர்மாவை அப்பதவியில் இருந்து நீக்கி, சுப்மன் கில்லை புதிய கேப்டனாக நியமித்தனர்.
இந்நிலையில், தனது பிட்னஸை மேம்படுத்தும் விதமாக கடந்த 3 மாதங்களில் சுமார் 20 கிலோ எடையை அவர் குறைத்திருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே ஆஸ்திரேலியாவின் டேவிட் பூன் போல் ரோகித் சர்மா மாறி வருவதாக விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் தற்போது தனது தோற்றத்தை மாற்றி பிட்டாகி இருக்கிறார் ரோகித் சர்மா. சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற தனியார் கிரிக்கெட் விழாவிற்கு ஸ்மார்ட் லுக்கில் வந்த அவரை பலரும் வியப்போடு பார்த்தனர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் மகிழ்ச்சியை பதிவிட்டு வருகின்றனர்.