Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

முதல்கட்ட பகுதிகள் 2028ல் அனுப்பி வைக்கப்படும் 52 டன் எடையுடன் இந்திய விண்வெளி நிலையம்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தினகரனுக்கு சிறப்பு பேட்டி

நாகர்கோவில்: இந்திய விண்வெளி நிலையம் 52 டன் எடையில் அமைக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார். இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேற்று குமரி மாவட்டம் வந்தார். சாமிதோப்பில் அய்யா வைகுண்டர் தலைமை பதியில் தரிசனம் செய்தார். பின்னர் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் இஸ்ரோ பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கி தீபாவளியை கொண்டாடினார். அங்கு அவர் ‘தினகரன்’ நிருபரிடம் கூறியதாவது:

இந்திய விண்வெளி நிலையம் (பாரதிய அந்தரிக்‌ஷ ஸ்டேஷன்) 2035க்குள் அமைக்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த விண்வெளி நிலையம் மொத்தம் 52 டன் எடை கொண்டதாக அமையும். அதனை ஒரே ராக்கெட்டில் கொண்டு செல்ல முடியாது. 5 கட்டங்களாக நாம் விண்வெளிக்கு கொண்டு செல்ல உள்ளோம். இதன் முதல் கட்டம் (பிஏஎஸ்-1) பகுதிகள் 2028ல் அனுப்ப ஒன்றிய அரசு அனுமதி தந்துள்ளது. அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

கட்டுமான பணிகள் நடந்து முதல்கட்டம் 2028ல் அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் 4 கட்டங்கள் தொடர்ந்து அனுப்பி வைக்கப்பட்டு 2035 முழு அளவில் இந்திய விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டு விடும். ஏஐ மற்றும் ரோபோட்டிக் தொழில்நுட்பம் இஸ்ரோவிலும் தீவிரமாக தொடங்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன்னர் நாம் கணினி இல்லாமல் பணிகளை செய்து வந்தோம். இன்று கணினி இன்றி பணிகள் செய்யப்படுவது இல்லை. அதனை போன்று ஏஐ தொழில்நுட்பம் நிறைய இடங்களில் பயன்படுகிறது.

ரோபோட்டிக் தொழில்நுட்பமும் அதனை போன்றுதான் பயன்பாட்டில் உள்ளது. நாம் ஆட்களின்றி ஒரு ராக்கெட் அனுப்ப உள்ளோம். அதில் ‘வயோமித்ரா’ எனப்படும் ஒரு ரோபோவை அனுப்ப உள்ளோம். ‘ரோபோட்டிக் ஆர்ம்’ (ரோபோ கை) விண்வெளியில் ஒன்று செயல்படுத்தி காண்பித்துள்ளோம். சந்திரயான்- 4 நிலவில் இறங்கி அங்கிருந்து மாதிரிகள் எடுத்துவர வேண்டியுள்ளது. அப்போது இந்த ‘ரோபாட்டிக் ஆர்ம்’ நமக்கு தேவைப்படுகிறது. அதற்கான பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது.

வரும் மார்ச் மாதத்திற்குள் 6 ராக்கெட்கள் அனுப்ப திட்டமிட்டுள்ளோம். இதில் தொலைத்தொடர்பு செயற்ைக கோள்கள் 2 அனுப்ப உள்ளோம். பாரத பிரதமர் ‘ஸ்பேஸ் அட் ரீ பார்ம்’ என்ற இந்திய விண்வெளித்துறையில் தனியார் துறை நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்க சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளார். அதன்படி தனியார் நிறுவனங்கள், கல்லூரிகள் ஸ்பேஸ் ரிசர்ச் செய்யும் திட்டத்திற்கு இஸ்ரோ சார்பில் உதவிகள் வழங்கி வருகிறோம்.

அதில் 5 பிஎஸ்எல்வி ராக்கெட்கள் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் மற்றும் எல்என்டி ஆகியோரிடம் தயாரிக்க அளித்திருந்தோம். அதில் முதல் ராக்கெட் வெளிவர இருக்கிறது. அதனை ஏவ உள்ளோம். டெக்னாலஜி டெமான்ஸ்ட்ரேஷன் சாட்டிலைட் ஒன்று 34 டெக்னாலஜிகள் இணைக்கப்பட்டு செயல்படுத்தப்படும், அதுவும் தயாராகி வருகிறது. அதனை போன்று இந்தியாவின் மனித விண்வெளி பயண திட்டமான ‘ககன்யான்’ திட்டத்தின் முதல் பகுதியாக ஆட்கள் இல்லாமல் நாம் முதல் ராக்கெட் அனுப்பவும் திட்டமிட்டுள்ளோம்.

நாட்டில் இயற்கை சீற்றங்கள் அதிகம் நடைபெறுகிறது. ஆனால் 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இயற்கை சீற்ற அழிவுகள் இன்று குறைந்துள்ளது. இப்போது ஒரு புயல் எங்கு கரையை கடக்கும் என்பதை நாம் முன்னரே கண்டுபிடித்து தகவல் தெரிவிக்கிறோம். இயற்கை சீற்றங்களை நிறுத்த முடியாது, அதனை முன்னெச்சரியாக எதிர்கொள்ளவும், பொதுமக்களை இடம்பெயர செய்து உயிர் இழப்புகளை குறைக்கிறோம். சுனாமி அலைகளை கண்காணிக்கிறோம். வானிலை ஆய்வுகள் ஐஎம்டி செய்தாலும் செயற்ைக கோள்கள் மூலம் அதற்கான பாராமீட்டர்களை கண்டறிந்து வழங்கி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.