சென்னை: ‘ஒய்டி ஒன்’ என்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவமிக்க இலகுவான சக்கர நாற்காலியை சென்னை ஐஐடி உருவாக்கியுள்ளது. இதன் அறிமுக நிகழ்ச்சி கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில் மருத்துவமனை சேவைகள் (ஆயுதப்படைகள்) தலைமை இயக்குநர் நவ்சேனா பதக்கம் பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர் வைஸ் அட்மிரல் அனுபம் கபூர் தலைமை விருந்தினராக பங்கேற்றார். சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்) விஞ்ஞானி ரவீந்திரசிங், ஐஐடி மெக்கானிக்கல் துறை உதவிப் பேராசிரியர் மணீஷ் ஆனந்த் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு 8.5 கிலோ எடையுடன் கூடிய ‘ஒய்டி ஒன்’ என்ற சக்கர நாற்காலியை அறிமுகம் செய்தனர். இது, சராசரி நாற்காலியை விட 50 சதவிகிதம் எடை குறைவாகவும், எளிதில் எங்கும் எடுத்துச்செல்லும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறியதாவது:
இந்தியாவிலேயே மிகவும் எடை குறைவான சக்கர நாற்காலி செய்துள்ளோம். சென்னை ஐஐடியில் உள்ள 103 ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் ஒன்று தான் த்ரைவ் மொபிபிட்டி. அதனுடன் இணைந்து ஐஐடி நடத்திய ஆய்வுகளில் ஒன்றுதான் இப்போது சக்கர நாற்காலியாக மாறி உள்ளது.
சராசரி சக்கர நாற்காலி 17 கிலோ எடையுடனும், அதிக பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலையில் இருக்கும். ஆனால் இது ரூ.75 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற எடை குறைவான சக்கர நாற்காலியை வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்திருந்தால் ரூ.2 லட்சத்திற்கும் மேற்பட்ட அளவில் செலவாகும். அலுமினியம் மற்றும் கார்பன் பைபர் கொண்டு இலகுவாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சக்கர நாற்காலியை thrvymobility.com என்ற இணையதள பக்கத்தில் சென்று ஆர்டர் செய்துகொள்ளலாம். மெக்கானிக்கல், புரொடக்ஷன், மெட்டல் உள்ளிட்ட 5 வகையான இன்ஜினியரிங் துறை சார்ந்தவர்கள் இணைந்து இதனை தயாரித்துள்ளனர். சிவில், மெக்கானிக்கல் உள்ளிட்ட கோர் இன்ஜினியரிங் துறைக்கு ஆட்கள் இல்லை என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. பல நிறுவனங்களில் இருந்து எங்களை அணுகி துறை சார்ந்த பொறியியல் வல்லுனர்கள் தேவை இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஏஐ-யை வைத்து மட்டும் உலகை ஆள முடியாது. இன்னும் 5 வருடங்களில் கோர் படிப்புகளுக்கான தேவைகளும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.