Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வார சந்தைகளில் தீபாவளி சேல்ஸ் அமோகம் ரூ.14 கோடிக்கு ஆடுகள் விற்பனை

சென்னை: தீபாவளியையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த வாரசந்தைகளில் ரூ.14 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. தென் மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் வாரந்தோறும் வெள்ளி மற்றும் சனிக்கிழமை என இரு நாட்கள் வியாபாரம் நடந்து வருகிறது. நெல்லை, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திருச்சி, கோவை என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மொத்த வியாபாரிகள் இங்குவந்து ஆடுகளை வாங்கி செல்கின்றனர். அதேபோல் இந்தாண்டுக்கான தீபாவளி வியாபாரம் கொட்டும் மழையிலும் இருநாட்கள் களை கட்டியது. சுமார் ரூ.7 கோடி வரை ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

திருச்செந்தூர்

திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று நடந்த வாரச்சந்தைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வெள்ளாடு, கொடி ஆடு, சீமை ஆடு, வேலி ஆடு, செம்மறி ஆடு என ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்டன. சுமார் ரூ. 1.10 கோடி வரை ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வாரச்சந்தை தமிழகத்திலேயே மிகப்பெரிய இரண்டாவது சந்தையாக திகழ்கிறது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை கூடும் சந்தையில் இங்கு தங்கம் முதல் தக்காளி வரை விற்பனை செய்யப்படும். இன்று கூடிய சந்தைக்கு, போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். ஆடுகளை வாங்க ஓசூர், சேலம், திருவண்ணாமலை, வேலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான ஆதிரா, கர்நாடகா வில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் குவிந்திருந்தனர். சந்தையில்இன்று ரூ.2 கோடிக்கு ஆடு விற்பனையானது.

தர்மபரி

இதேபோல் தர்மபுரி சந்தைப்பேட்டையில், ஞாயிறு சந்தை இன்று கூடியது. சந்தையில் இன்று ரூ.3 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமைதோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு ஆடுகள் விற்பனை சனிக்கிழமை இரவு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி வரை நடைபெறும். தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளதையொட்டி, நேற்று இரவு முதல் சந்தைக்கு அதிகளவில் ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல, ஆடுகளை அறுக்கவும், தோலை உரிப்பதற்கு பயன்படுத்தும் கத்தி உள்ளிட்ட உபகரணங்களின் விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்றது. வெட்டுக்கத்தி ரூ.600க்கும், உறி கத்தி ரூ.350க்கும் விற்கப்பட்டது.