சென்னை: வார இறுதி நாட்களையொட்டி 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வார இறுதிநாட்களையொட்டி சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை, கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 355 பேருந்துகளும், நாளை 350 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அதேபோல், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 55 பேருந்துகளும், நாளை 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்கப்பட உள்ளன.
மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஞாயிறன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இன்றைய தினம் பயணிக்க 5,230 பேரும், நாளை பயணிக்க 3,276 பேரும் ஞாயிறன்று 9,040 பயணிகளும் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் www.tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்கின்றோம்.