தன்னை திருமணம் செய்து நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றியதாக புகார்; பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவிடம் துணை கமிஷனர் வனிதா விசாரணை
சென்னை: தன்னை திருமணம் செய்து நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றிவிட்டதாக அளித்த புகாரின் மீது இன்று பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவிடம் பெண் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவில் துணை கமிஷனர் வனிதா விசாரணை நடத்தி வருகிறார். அவரிடம் திருமணம் செய்தது குறித்தும், கருகலைப்பு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கேள்வி பட்டியலை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 29ம் தேதி பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தனது தாயுடன் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், நான் 2011 முதல் ஒரு புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளராக இருக்கிறேன். 2018ம் ஆண்டு ஜே.ஜே. பிரெடிக் என்பவரை மணந்தேன், 2020 ம் ஆண்டு எங்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், நாங்கள் இருவரும் தனித்தனியாக வசித்து வந்தோம். அந்த நேரத்தில் கடந்த ஜூலை 2023 ல், சில நண்பர்கள் மூலம், மாதம்பட்டி ரங்கராஜை நான் சந்தித்தேன். 1.8.2023 முதல் 30.8.2023 வரை பல சந்தர்ப்பங்களில் நாங்கள் சந்தித்தோம். அந்த சந்திப்புகளின் போது, மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி சுருதியிடமிருந்து நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்றதாகவும், என்னை புரிந்து கொள்ளும் வாழ்க்கைத் துணையாக என்னை அவர் விரும்புவதாக என்னிடம் தெரிவித்தார்.
அதற்கு நான், எனது குடும்ப வாழ்க்கையைப் பற்றி அவரிடம் விளக்கினேன். பிறகு அவர், என்னை திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருப்பதாகவும், நான் உடனடியாக எனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற வேண்டும் என்றும் கூறினார், அதன் பிறகு மாதம்பட்டி ரங்கராஜ் சென்னைக்கு அடிக்கடி வரத் தொடங்கினார், பல்வேறு ஹோட்டல்களில் என்னுடன் நேரத்தை அவர் செலவிட்டார். அதனை தொடர்ந்து கடந்த 2023 டிசம்பர் 24 ம் தேதி அவரது நண்பர்கள் மற்றும் ஊழியர்கள் முன்னிலையில், நாங்கள் இருவரும் சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள திருவீதி அம்மன் கோவிலில் திருமணம் செய்துகொண்டோம். பிறகு மாதம்பட்டி ரங்கராஜ் என்னை பல விழாக்கள், ஹோட்டல்கள் மற்றும் சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்வார், அங்கு அவர் என்னை அனைவருக்கும் தனது மனைவி என அறிமுகப்படுத்துவார். அதன் பிறகு செப்டம்பர் 2024 ல், நான் கர்ப்பமானேன், மாதம்பட்டி ரங்கராஜ் என்னை மிரட்டி கருக்கலைப்பு செய்தார். பின்னர் மீண்டும் டிசம்பர் 2024 ல், நான் கர்ப்பமானேன். மறுபடியும் அவர் குழந்தையை கருக்கலைப்பு செய்ய என்னை கட்டாயப்படுத்தி கலைத்தார். பிறகு மீண்டும் கடந்த ஏப்ரல் 2025ல், மீண்டும் கர்ப்பமானேன்.
இந்த முறையும் அவர் என்னை கருக்கலைப்பு செய்யச் சொன்னார், அதை நான் மறுத்துவிட்ேடன். இதனால் கடந்த ஏப்ரல் மாதம் என்னை அடித்தார். அதனால் எனது இடது காது பாதிக்கப்பட்டு எனக்கு பார்வை பிரச்சினைகள் ஏற்பட்டன.நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்த போது எடுத்த அனைத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்த ஐ-போன் மற்றும் ஐ-பேடை உடைத்தார். அப்போது குழந்தை உனக்கு வேண்டுமா அல்லது நான் உனக்கு வேண்டுமா என்று கேட்டு என்னை மிரட்டத் தொடங்கினார். பிறகு அவரது நண்பர்கள், பெற்றோர்கள் மற்றும் அருண் பாபு போன்றவர்கள் மூலம் என் மகனின் வாழ்க்கையை முடித்துவிடுவேன் என்று மிரட்டுகின்றனர்.என்னை திட்டமிட்டு எனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற வைத்து திருமணம் செய்து குழந்தை கொடுத்துவிட்டு என்னை ஏமாற்றிவிட்டார். எனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு ‘மாதம்பட்டி ரங்கராஜ் தான் அப்பா’ எனக்கு அவர் தான் கணவர். இதில் எந்த சமரசமும் செய்யமாட்ேடன். நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் உள்ளது. அதை நான் வெளியிட விரும்பவில்லை. எனவே, என்னை திட்டமிட்டு திருமணம் செய்து ஏமாற்றி குழந்தை கொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார்.
அந்த புகாரின் படி விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் அருண் சென்னை பெண் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் வனிதா விசாரணை நடத்த உத்தரவிட்டார். அந்த உத்தரவின் படி ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுக்கு கடந்த வாரம் திங்கள் கிழமை (இன்று) நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. அந்த சம்மனை தொடர்ந்து ஜாய் கிரிசில்டா இன்று காலை 11 மணிக்கு ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பெண் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் அலுவலகத்தில் ஆஜரானார். துணை கமிஷனர் வனிதா, ஜாய் கிரிசில்டாவிடம், மாதம்பட்டி ரங்கராஜ் உடனான தொடர்புகள்? திருமணம் செய்ததற்கான ஆவணங்கள், கருக்கலைப்பு செய்ததற்கான ஆவணங்கள் குறித்து 50க்கும் மேற்பட்ட கேள்வி பட்டியலை ைவத்து வனிதா விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது ஏஐ தொழில் நுட்பம் இருப்பதால் திருமணம் செய்த புகைப்படங்கள், அதற்கான தரவுகள் குறித்தும் துணை கமிஷனர் விசாரணை நடத்தி வருகிறார்.