வெப்தொடரில் தன்னை தவறாக சித்தரித்த நடிகர் ஷாருக்கான் நிறுவனம் மீது ரூ.2 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு: முன்னாள் போதை பொருள் தடுப்பு அதிகாரி அதிரடி
புதுடெல்லி: ஷாருக்கானின் மகன் இயக்கியுள்ள வெப் தொடரில் தன்னை அவதூறாகச் சித்தரித்ததாகக் கூறி, முன்னாள் அதிகாரி சமீர் வான்கடே வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டு சொகுசுக் கப்பல் போதைப் பொருள் வழக்கில், பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை, போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் முன்னாள் அதிகாரியான சமீர் வான்கடே கைது செய்தார். பின்னர், போதிய ஆதாரங்கள் இல்லாததால் ஆர்யன் கான் அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதனிடையே, ஷாருக்கான் குடும்பத்திடம் இருந்து ரூ.25 கோடி லஞ்சம் கேட்டதாக சமீர் வான்கடே மீது சி.பி.ஐ. ஊழல் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த நிலையில், ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மற்றும் ஓ.டி.டி. தளம் மீது சமீர் வான்கடே ரூ.2 கோடி மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் இயக்கியுள்ள ‘தி பேண்ட்ஸ் ஆஃப் பாலிவுட்’ என்ற வெப் தொடரில், தன்னைத் தவறாகவும், அவதூறாகவும் சித்தரிக்கும் ஒரு கதாபாத்திரம் இடம்பெற்றுள்ளதாக அவர் தனது மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். அந்த மனுவில் ‘போதைப் பொருள் தடுப்பு அமைப்புகளின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும், பொதுமக்களின் நம்பிக்கையைக் குலைக்கும் வகையிலும் இந்தத் தொடர் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘சத்யமேவ ஜெயதே’ என்ற தேசிய வாசகத்தைக் கூறிய உடனேயே ஆபாசமான சைகை செய்யும் காட்சி, தேசிய சின்னங்களை அவமதிக்கும் சட்டத்தை மீறுவதாகும். இந்த வழக்கில் எனக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்தால், நஷ்ட ஈடாகப் பெறும் ரூ.2 கோடியையும் டாடா நினைவு புற்றுநோய் மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்குவேன்’ என்று சமீர் வான்கடே தெரிவித்துள்ளார். இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.