Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆயுதங்கள் ஏந்திய கும்பல் அட்டகாசம் கடையநல்லூர் தொழிலாளர்களை மாலியில் தீவிரவாதிகள் கடத்தல்: மீட்டுத்தர பிரதமர், முதல்வருக்கு உறவினர்கள் கண்ணீர் கோரிக்கை

கடையநல்லூர்: மாலி நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட கடையநல்லூரை சேர்ந்த தொழிலாளர்கள் 2 பேரை மீட்டுத்தர வேண்டும் என்று பிரதமர், முதல்வருக்கு உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள மாலி நாட்டில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதப் படைகளுக்கும், அரசுப்படைகளுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக மாலியில் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. இந்நிலையில், மாலியின் மேற்கு பகுதியில் உள்ள கோப்ரி நகரத்தில், கிராமப்புற மின்மயமாக்கல் திட்ட பணிகள் நடந்து வருகிறது.

இதற்காக தனியார் மின்வாரிய நிறுவனத்தில் வேலை செய்து வந்த இந்திய தொழிலாளர்கள் 5 பேரை அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய குழுவினர், கடந்த 6ம் தேதி கடத்தி சென்றனர். இதை தொடர்ந்து, மாலியின் தலைநகர் பமாகோவில் இருந்து அந்த நிறுவனத்தின் இந்திய தொழிலாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், 5 இந்தியர்கள் கடத்தப்பட்டதற்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ராணுவ அரசின் ஆட்சி நடைபெற்று வரும் மாலியில் அல்ெகாய்தா மற்றும் ஐஎஸ்எஸ்.

தீவிரவாதிகளுடன் தொடர்புடைய அமைப்பினர் தொடர் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். மேலும், இந்த தீவிரவாதிகள் மாலியில் உள்ள வெளிநாட்டினரைக்கடத்தி பணம் பறிப்பிலும் ஈடுபட்டு வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாலியில் கடத்தப்பட்ட 5 நபர்களில் இருவர் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. கடையநல்லூர் நகராட்சி முத்துகிருஷ்ணாபுரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இசக்கிராஜா (36) என்பவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு உறவினர் மூலம் மாலிக்கு சென்றுள்ளார்.

தற்போது அவர் கடத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இவருக்கு பிரவீனா என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். இதே போல், கடையநல்லூர் ஒன்றியம் புதுக்குடி ஊராட்சி கண்மணியாபுரத்தை சேர்ந்த முருகேசன் மகன் சுரேஷூம் (26) கடத்தப்பட்டுள்ளார். இரண்டு பேரையும் மீட்க வேண்டுமென அவரது உறவினர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி ஆகியோருக்கு கோரிக்கை அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து இசக்கிராஜா மனைவி பிரவீனா கண்ணீர் மல்க கூறுகையில், ‘புளியரையைச் சேர்ந்த எனது உறவினர் ஒருவர் மூலமாக மேற்கு ஆப்ரிக்காவின் மாலிக்கு எனது கணவர் வேலைக்கு சென்றார். அங்கு உயர் அழுத்த மின் கோபுரம் அமைத்தல் பணியில் ஈடுபட்டு வந்தார். 7 மாதம் முடிந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு என்னிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினார். அதன் பின்பு எனது கணவரை தொடர்பு கொண்ட போது போன் வேலை செய்யவில்லை.

உடனே அருகில் உள்ள நண்பர்களுக்கு போன் செய்த போது தீவிரவாதிகள் கடத்தி விட்டனர் என்று கூறினர். இதுகுறித்து தமிழக முதல்வருக்கும் புகார் மனு அனுப்பி உள்ளேன். இன்று (திங்கட்கிழமை) மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்க உள்ளேன். கடத்தப்பட்ட எனது கணவரை உடனடியாக மீட்டு தர வேண்டும்.’’ என்றார். இதே போல கண்மணியாபுரத்தைச்சேர்ந்த சுரேஷின் தந்தை முருகேசனும் இன்று மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளிக்க உள்ளார்.