Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டின் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி: ஒன்றிய அரசுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கை: இந்தியாவிலேயே பா.ஜ.க. காலூன்ற முடியாத மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால் ஒன்றிய அரசு வஞ்சிக்கிற போக்கை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. நேற்று நாடாளுமன்றத்தில் சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட வேண்டிய ரூபாய் 2151 கோடி எப்போது ஒதுக்கப்படும் என்று எழுப்பப்பட்ட கோரிக்கைக்கு ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்துள்ள பதில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது. எதிர்கட்சிகள் ஆளுகிற தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இந்த நிதி ஒதுக்கப்படாமல் மறுக்கப்பட்டு வருகிறது. பா.ஜ.க. அரசு 2020ம் ஆண்டு அறிமுகம் செய்த புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டு பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் மற்றும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் ஆகியவற்றை திறக்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டால் தான் சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்படும் என்று கூறியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

சமக்ரா சிக்ஷா அபியான் கல்வித் திட்டத்திற்கு நிதி மறுக்கப்படுவதால் 43.9 லட்சம் மாணவர்கள், 2.21 லட்சம் ஆசிரியர்கள், 32,701 ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும் பல்வேறு நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் இவர்களுக்கான செலவை தமிழ்நாடு அரசு பட்ஜெட் மூலம் ஈடுகட்டி வருகிறது. இப்பிரச்னை இரு அரசியல் கட்சிகளுக்கிடையேயானது அல்ல; மாநிலம் சம்பந்தப்பட்ட து. இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஒன்றிய அரசு அணுகுவது பா.ஜ.க.வின் எதேச்சதிகார போக்கையே காட்டுகிறது. தமிழ்நாடு கல்வித்துறையை வஞ்சிப்பது போலவே, காவிரி டெல்டா விவசாயிகள் அரசு நெல் கொள்முதலில் ஈரப்பத அளவை 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கையை தமிழ்நாடு அரசு முன்வைத்ததும் ஒன்றிய அரசின் வல்லுநர் குழு டெல்டா மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தது.

ஆனால், இதுவரை இதுகுறித்த எந்தவிதமான அறிவிப்பும் வரவில்லை. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்ட திட்டத்திற்கு நிதி மறுப்பு, கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு 20 லட்சம் மக்கள் தொகை இல்லையென்று பொருந்தாத காரணத்தை கூறி ஒன்றிய அரசு நிராகரித்து விட்டது. இத்தகைய தமிழ்நாட்டை வஞ்சிக்கிற போக்கு தொடருமேயானால் அதற்குரிய விளைவுகளை ஒன்றிய பா.ஜ.க. அரசு சந்திக்க நேரிடும் என எச்சரிக்க விரும்புகிறேன்.