செல்வப்பெருந்தகை மீது கீழ்த்தரமான விமர்சனம் நாலாந்தர பேச்சாளராக மாறி வரும் எடப்பாடி: ஆ.ராசா கடும் கண்டனம்
சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா நேற்று வெளியிட்ட அறிக்கை: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சுந்தரா டிராவல்ஸ் பயணத்தில் நீலகிரி மாவட்டத்தில் பேசும் போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை தரம் தாழ்ந்து, இழிவுபடுத்தி பேசியிருப்பது கடும் கண்டத்திற்குரியது. திமுக கூட்டணிக் கட்சிகள் பற்றியும் அதன் தலைவர்கள் பற்றியும் தொடர்ந்து அவதூறுகளை பேசி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை பிச்சைக்காரர் என்றும், ஒட்டுப்போட்ட சட்டைப் போட்டவர் என்றும் பேசி இருப்பது அநாகரிகத்தின் உச்சம். ஒரு தலைவருக்கு உரிய எந்தப் பண்பும் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. நாலாந்தரப் பேச்சாளராக மாறி வருகிறார்.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டிற்குப் போய்விட்டு முகத்தை மூடியபடியே காரில் வந்தவர் எல்லாம் ‘பிச்சைக்காரன்’ எனப் பேசுவது சரியா?. தன்னுடைய மோசமான பேச்சு, எதிர்வினையை உண்டாக்கும். அடுத்து யார் அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தப் போகிறார் என்று தன்னுடைய சகாக்களையே நம்ப முடியாத பரிதாப நிலையில் இருப்பவர் எடப்பாடி பழனிசாமி. திமுக கூட்டணியில் ஒற்றுமையில்லை, குழப்பம் நிலவுகின்றது என்று கூறுவது எல்லாம் நல்ல வேடிக்கை. தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் பாஜவுடன் கூட்டணி சேர்ந்து தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்துள்ள எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் கட்சியின் தலைவருடைய விசுவாசம் பற்றிப் பேச ஒரு தகுதியும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.