மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில் 2வது நாளாக நேற்றும் நீர்வரத்து விநாடிக்கு 6,500 கனஅடியாக நீடித்தது. அதேசமயம் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 5,256 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 6,251 கனஅடியாக சற்று அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 18,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை விநாடிக்கு 15,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்காக மேல்மட்ட மதகுகள் வழியாக 500 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை விட, நீர்வரத்து குறைவாக இருப்பதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 114 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 113.27 அடியானது. நீர் இருப்பு 83.14 டிஎம்சியாக உள்ளது.