வத்திராயிருப்பு: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று தடை விதிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே, மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 4,500 அடி உயரத்தில் உள்ள இந்தக் கோயில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தினமும் இந்தக் கோயிலில் பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்து வருவதால் சதுரகிரி கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள சங்கிலிப்பாறை, மாங்கனி ஓடை, கருப்பசாமி கோவில் ஓடை உள்ளிட்டவைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு கருதி சதுரகிரி கோயிலுக்கு மலையேறி செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோயிலுக்கு செல்வதற்காக இன்று காலை தாணிப்பாறை கேட் அருகே காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.



