பலாத்கார புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் குடிநீர் தொட்டியின் மீது ஏறி பாதிக்கப்பட்ட பெண் போராட்டம்: மத்திய பிரதேசத்தில் பரபரப்பு
சிவபுரி: பாலியல் வன்கொடுமை புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் நீர்த்தேக்கத் தொட்டியின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசம், சிவபுரி மாவட்டம், கனியாடானா நகரைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர், கடந்த அக்டோபர் 25ம் தேதி மோஹர் சிங் ஜாதவ் என்பவரால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு, ஒரு வாரம் சிறைவைக்கப்பட்டு, பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரிடமிருந்து தப்பித்த அப்பெண், கடந்த 5ம் தேதி கனியாடானா காவல் நிலையத்தில் புகார் அளிக்க முயன்றுள்ளார்.
ஆனால், காவல்துறையினர் தனது புகாரை அலட்சியப்படுத்தி, உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய மறுத்துவிட்டனர் என்று அவர் குற்றம்சாட்டினார். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் விரக்தியடைந்த அவர், நேற்று அவரது கிராமத்தில் உள்ள உயரமான குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டியின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை மற்றும் அதிகாரிகள், சுமார் 90 நிமிடங்கள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ‘உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதை ஏற்றுக்கொண்ட அப்பெண், குடிநீர் தொட்டியில் இருந்து கீழே இறங்கினார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்ட மோஹர் சிங் ஜாதவ் மீது காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
