பிச்சாட்டூர் ஏரியில் தண்ணீர் திறப்பு; மங்களம் கிராமத்தில் மீண்டும் மூழ்கிய தரைப்பாலம்: 10 கிராம மக்கள் கடும் அவதி
ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே மங்களம், பெருமாள் பேட்டை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருட்கள் வாங்கவும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் விவசாயிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் ஆகியோர், மங்களம் பகுதியில் ஆரணியாற்றின் குறுக்கே உள்ள செம்மண் சாலை வழியாக ஆரணிக்கு சென்று அங்கிருந்து கும்மிடிப்பூண்டி, கவரைபேட்டை, பொன்னேரி ஆகிய பகுதிகளுக்கும், பெரியபாளையம் சென்று அங்கிருந்து திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர், சென்னை ஆகிய பகுதிகளுக்கும் படிப்பு, வேலை, வியாபாரம் சம்மந்தமாகவும் சென்று வருவார்கள். இந்நிலையில். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் கடந்த பிப்ரவரி மாதம் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் மூலம் மங்களம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடை, புதுப்பாளையத்தில் புதிதாக கட்டப்படும் உயர்மட்ட பாலம் போன்றவற்றை ஆய்வு செய்தார். அப்போது, அங்கு வந்த மங்களம் கிராம மக்கள் தங்கள் ஊருக்கு தரைப்பாலம் அமைத்து தர வேண்டும் என கோரிகை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், ஆரணியாற்றில் வெள்ளம் வந்தால் 10 கிராம மக்களாகிய நாங்கள் ஆபத்தான முறையில் செல்கிறோம். தரைப்பாலம் கட்ட வேண்டும் என பல முறை மனு கொடுத்துள்ளோம். ஆனால், இதுவரை யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினர். இதை கேட்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து தரைப்பாலம் கட்ட மதிப்பீடு செய்யும்படி உத்தரவிட்டார். பின்னர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலெக்டருக்கு மதிப்பீடு செய்து கொடுத்தனர். இதனையடுத்து, கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் தரைப்பாலம் கட்ட பூமிபூஜை போடப்பட்டது. அதன்படி, ரூ.93 லட்சம் மதிப்பீட்டில் தரைப்பாலத்திற்கான பணிகள் ஜூன் மாத இறுதியில் தொடங்கியது. இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், கடந்த மாதம் பெய்த மழையால் ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அதிகளவு தண்ணீர் வந்ததால் தரைப்பாலப்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க ஆரணியாற்றை கடந்து ஆபத்தான முறையில் சென்றனர். பின்னர், தண்ணீர் வடிந்து மக்கள் போக்குவரத்து தொடங்கியது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் ஏரியில் இருந்து 800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், பெரியபாளையம் அருகே மங்களம் தரைப்பாலம் நேற்று மீண்டும் மூழ்கியது. இதில், கிராம மக்கள் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து செல்கிறார்கள்.


