மேட்டூர்: கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு மற்றும் இரு மாநில எல்லையின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல்லில் நேற்று காலை 32 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 28ஆயிரம் கனஅடியாக குறைந்த நிலையில் இன்று காலை 32 ஆயிரம் கனஅடியாக மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள ஐந்தருவி, சினி பால்ஸ், மெயினருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் அருவி மற்றும் ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை நீடிக்கிறது. பாதுகாப்பு கருதி அருவிகளுக்கு செல்லும் நடைபாதைக்கு பூட்டு போட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று காலை 35,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலையும் அதே அளவில் நீடித்தது. அணையில் இருந்து நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22,300 கனஅடி, உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 12,700 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல் மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் இன்று 4 வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது. நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்த நிலையில் 67.4 மி.மீ., பதிவாகியுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து 35ஆயிரம் கனஅடி திறப்பால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் இடைப்பாடி அருகே பூலாம்பட்டி-நெரிஞ்சிப்பேட்டை நீர்மின் கதவணையில் சேலம்-ஈரோடு மாவட்டம் இடையே விசைப்படகு போக்குவரத்து இன்று 2வது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது.