Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் சென்னையில் தண்ணீர் தேங்கும் இடங்கள் முற்றிலுமாக குறைந்துள்ளது: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் சென்னையில் தண்ணீர் தேங்கும் இடங்கள் முற்றிலுமாக குறைந்துள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். சென்னையில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. தொடர் கனமழை காரணமாக சென்னையின் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. ஆனாலும் மழைநீர் வடிகால்கள் அமைப்பு மூலம் ஒரு சில மணி நேரங்களில் அவை வேகமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் நடைபெறும் இடங்களில் மட்டும் மழைநீர் வடிகால் இணைப்புகள் இல்லாததால் சில இடங்களில் இடுப்பளவு வரை தண்ணீர் தேங்கியது. அவற்றையும் மோட்டார் அமைப்புகள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. இப்படி தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் தான் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றின் தாக்கத்தால் திடீரென்று சென்னையில் 3 மாடி அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்தது.

இந்த துயர சம்பவம் சென்னை புரசைவாக்கத்தில் நடந்துள்ளது. புரசைவாக்கத்தில் உள்ள தாசமகான் சாலையில் உள்ள சுமார் 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த 3 மாடிகள் கொண்ட கட்டடம் உள்ளது. இதன் தரைதளத்தில் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் மேல்தளத்தில் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தான் திடீரென்று கட்டடத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. பெரும் சத்தத்துடன் கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் தீயணைப்பு வீரர்கள், போலீசார் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த விபத்தில் 4 பேர் காயமடைந்த நிலையில் அதில் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ஒருவர் மட்டும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் கனமழையால் இடிந்து விழுந்த கட்டிடத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் அதே பகுதியில் பழுதடைந்த நிலைமையில் உள்ள கட்டிடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் அதனை ஒரு வாரத்திற்குள் இடித்து அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் கட்டிட விபத்தில் சிக்கி சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்மணியை நேரில் சந்தித்து அமைச்சர் சேகர் பாபு நலம் விசாரித்தார அப்போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: தர்கா தெருவில் 8 கடைகள் கொண்ட இந்த கட்டிடமானது ஆபத்தான சூழ்நிலையில் இருந்தது, சென்னை மாநகராட்சி சார்பில் அப்புறப்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது. மழைக்காலத்தில் கட்டிடத்தில் தண்ணீர் நுழைந்ததால் இடிந்து சேதாரம் அடைந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 3 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர், ஒரு பெண் மட்டும் கேஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவரும் நன்றாக உள்ளார்.

மேலும் இதே பகுதியில் பழுதடைந்து அபாயகரமான சூழலில் உள்ள கட்டிடத்தை பார்வையிட்டேன், ஒரு வார காலத்திற்குள் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு சென்னையில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளதால் பெரிய அளவில் எங்கும் தண்ணீர் தேங்காத நிலை உள்ளது. கடந்த காலங்களில் இந்த பகுதியில் 10 செ.மீ., மழை பெய்தாலே தண்ணீர் வடியாமல் இருந்த சூழல் இருந்தது.

ஆனால் தற்போது மழை விட்டவுடன் ஒரு மணி நேரத்தில் மழைநீர் வடிந்து விடுகிறது. கொளத்தூரில் உள்ள ஜவகர் நகர் பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த காலங்களில் 10 செ.மீ., மழை பெய்தாலே 3,4 நாட்கள் தண்ணீர் நிற்கும் முதல்வர் செய்த பல்வேறு மாற்றங்களால் அந்த நிலை தற்போது முற்றிலுமாக மாறி உள்ளது.

வடசென்னையில் 20 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்தும் கூட எந்த இடத்திலும் தண்ணீர் தேங்காத நிலை தற்போது உள்ளது. ஒரு சில தாழ்வான பகுதிகளில் தேங்கிய தண்ணீர் கூட உடனடியாக வெளியேற்றப்பட்டு விட்டதாக கூறிய அமைச்சர் கடந்த காலங்களில் சென்னையில் 534 பகுதிகளில் மழை நீர் தேக்கம் உள்ள பகுதியாக இருந்தது. தற்போது அவை 136 என்ற அளவில் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.