ஒரு தண்ணீர் பாட்டில் ரூ.100, ஒரு காஃபி ரூ.700 ஆ!. நியாயமான விலை இல்லையெனில் திரையரங்குகள் காலியாகத்தான் இருக்கும்: உச்சநீதிமன்றம்
டெல்லி : “ஒரு தண்ணீர் பாட்டில் ரூ.100, ஒரு காஃபி ரூ.700 ஆ!. நியாயமான விலை இல்லையெனில் திரையரங்குகள் காலியாகத்தான் இருக்கும்” என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கர்நாடக அரசின் புதிய உத்தரவு படி, மாநிலம் முழுவதும் சினிமா டிக்கெட் விலை அதிகபட்சம் ரூ.200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிக விலையை குறைத்து, பொதுமக்களுக்கு ஏற்ற விலையில் திரைப்பட அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதே இந்த உத்தரவின் நோக்கம். ஆனால், இந்த முடிவை சவால் செய்து மல்டிப்ளெக்ஸ் சங்கம் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.
கர்நாடகாவில் சினிமா டிக்கெட் விலையை நிர்ணயித்த உத்தரவுக்கு எதிரான தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவில், "திரையரங்குகளில் நியாயமான விலையில் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். நியாயமான விலையில் டிக்கெட் கட்டணம் வசூலிக்காவிட்டால், மக்கள் வருகை குறைந்து தியேட்டர்கள் காலியாகிவிடும். மல்டி ப்ளக்ஸ்களில் டிக்கெட், உணவுப் பொருட்கள் மற்றும் பானங்களின் விலை குறித்து கவலை தெரிவித்துக் கொள்கிறோம்.திரையரங்குகளில் ரூ.100க்கு தண்ணீர் பாட்டில், ரூ.700க்கு காபி விற்பனை செய்கிறார்கள்."இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நட்சத்திர ஓட்டல்களில் ரூ.1,000 வரை காபி விலை உள்ளது.அதற்கு விலை நிர்ணயம் செய்ய முடியுமா? என்று மல்டிப்ளெக்ஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
