வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் அசத்தலாய் ஆடிய எலெனா அரை இறுதிக்கு முன்னேற்றம்: 2வது போட்டியில் அன்னா வெற்றி
வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டி ஒன்றில் ரஷ்யாவில் பிறந்து கஜகஸ்தானுக்காக ஆடி வரும் எலெனா ரைபாகினா, போலந்து வீராங்கனை மேக்தலீனா ஃபிரெச் மோதினர். அற்புத ஆட்டத்திறனை வெளிப்படுத்திய எலெனா, 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதிப் போட்டியில் ரஷ்ய வீராங்கனை அன்னா நிகோலயெவ்னா காலின்ஸ்கயா, டென்மார்க் வீராங்கனை கிளாரா டாவ்சன் மோதினர். முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றிய அன்னா, 2வது செட்டை 7-5 என்ற புள்ளிக் கணக்கில் போராடி வசப்படுத்தி போட்டியில் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் அரை இறுதிக்கு முன்னேறினார். இன்று நடக்கும் அரை இறுதிப் போட்டியில் கனடா வீராங்கனை லெய்லா ஃபெர்னான்டசுடன், ரைபாகினா மோதவுள்ளார். மற்றொரு அரை இறுதியில் பிரிட்டன் வீராங்கனை எம்மா ராடுகனு உடன் அன்னா மோதவுள்ளார்.