வாஷிங்டன்: வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று, 45 வயதான அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் அபார வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டி ஒன்றில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒஸாகா, ரஷ்யாவில் பிறந்து கஜகஸ்தானுக்காக ஆடி வரும் யூலியா புடின்சேவா மோதினர்.
துவக்கம் முதல் அதிரடியாக ஆடிய ஒஸாகா, 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடி 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு போட்டியில், 7 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள அனுபவம் வாய்ந்த அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் (45), சக அமெரிக்க வீராங்கனை பேடன் ஸ்டியன்ஸ் (23) உடன் மோதினார். வீனஸ், அற்புதமாக ஆடி, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் அமெரிக்க வீரர் பென்ஜமின் ஷெல்டன், சக அமெரிக்க வீரர் மைக்கேல் மேக்கன்ஸி டொனால்ட் உடன் மோதினார். நேர்த்தியாக ஆடிய ஷெல்டன் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
2வது அதிக வயது வெற்றி வீராங்கனை
டென்னிஸ் போட்டிகளில் ஒற்றையர் பிரிவில் அதிக வயதில் (47 வயதில்) வெற்றி பெற்ற வீராங்கனையாக அமெரிக்காவின் மார்டினா நவ்ரதிலோவா திகழ்கிறார். அந்த வரிசையில், வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று வெற்றி பெற்ற மற்றொரு அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ், 45 வயதில் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்று, 2வது அதிக வயது வெற்றி வீராங்கனையாக உருவெடுத்துள்ளார். அவர், கடந்த 2 ஆண்டுகளில் ஒற்றையர் பிரிவில் பெறும் முதல் வெற்றி இதுவே. முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான வீனஸ், கடந்த 2024 மே மாதத்துக்கு பின், ஒற்றையர் பிரிவு போட்டிகளில் ஆடுவதை தவிர்த்து வந்தார். தற்போது மீண்டும் களமிறங்கி அசத்தல் வெற்றியை பதிவு செய்துள்ளார்.