பல்கலை மாணவிகளுக்கு எச்சரிக்கை‘லிவிங் டுகெதர்’ முறையில் வாழ்ந்தால் 50 துண்டுகளாக வெட்டப்படுவீர்கள்: உபி ஆளுநர் சர்ச்சை பேச்சு
வாரணாசி: திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் உறவில் ஈடுபட்டால் 50 துண்டுகளாக வெட்டப்படுவீர்கள் என மாணவிகளை உத்தரப்பிரதேச ஆளுநர் எச்சரித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள மகாத்மா காந்தி காசி வித்யாபீடத்தின் 47வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர் ஆனந்திபென் படேல், ‘பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான செய்திகளைப் படிக்கும்போது எனக்கு மிகுந்த வேதனை ஏற்படுகிறது.
நமது மகள்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று எனக்குள் வருந்திக்கொள்வேன். நீதித்துறையை சேர்ந்தவர்களுடன் பேசும்போதுகூட, இதுபோன்ற உறவுகளில் பெண்களின் பாதுகாப்பு குறித்து அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, இளம் பெண்கள் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் உறவுகளில் ஈடுபட வேண்டாம். மீறி நீங்கள் ஈடுபட்டால், கொடூரமாக கொலை செய்யப்பட்டு 50 துண்டுகளாக சிதறிக் கிடப்பீர்கள் என எச்சரிக்கிறேன்’ என்றார். அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.