Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அமெரிக்காவுக்கு 4 நாடுகள் எச்சரிக்கை ஆப்கானில் மீண்டும் ராணுவ தளமா?டிரம்பின் முயற்சிக்கு ரஷ்யா, சீனா கண்டனம்

நியூயார்க்: ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு ராணுவத் தளங்கள் அமைப்பதற்கு ரஷ்யா, சீனா உள்ளிட்ட நான்கு நாடுகள் கூட்டாக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, கடநத 2021ம் ஆண்டு அமெரிக்கப் படைகள் அங்கிருந்து முழுமையாக வெளியேறின. இந்நிலையில், அங்கு மீண்டும் ராணுவத் தளத்தை அமைக்க அமெரிக்கா முயற்சிப்பதாகத் தெரிகிறது.

குறிப்பாக, தங்களது முக்கிய தளமாக விளங்கிய பாகிராம் விமானப்படைத் தளத்தை மீண்டும் ஒப்படைக்குமாறு தலிபான் நிர்வாகத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்தச் சூழலில், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 80வது கூட்டத்தொடரையொட்டி, ரஷ்யா, சீனா, ஈரான், பாகிஸ்தான் ஆகிய நான்கு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் நியூயார்க்கில் கூடிப் பேசினர்.

கூட்டத்திற்குப் பிறகு அவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில், ‘ஆப்கானிஸ்தானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு அனைத்து நாடுகளும் மதிப்பளிக்க வேண்டும். புதிய ராணுவத் தளங்களை அமைப்பது பிராந்திய அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் பெரும் தீங்கு விளைவிக்கும். ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைக்குக் காரணமான நேட்டோ உறுப்பு நாடுகள், புதிய ராணுவ முயற்சிகளில் ஈடுபடுவதற்குப் பதிலாக, அந்நாட்டின் பொருளாதார மீட்சிக்கும் செழிப்புக்கும் உதவ வேண்டும். ஆப்கான் அகதிகளுக்கு நிதி உதவி அளித்து அவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதை உறுதி செய்ய வேண்டும்.

ஐ.எஸ்.ஐ.எல், அல்கொய்தா, தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டி.டி.பி) போன்ற பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் மற்றும் சிறுமிகள் உட்பட அனைத்து குடிமக்களின் உரிமைகளுக்கும் மதிப்பளிக்கும் வகையிலான ஆட்சி அமைப்பு ஆப்கானிஸ்தானில் ஏற்படுத்தப்பட வேண்டும்’ எனவும் அந்த நாடுகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.