போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா-உக்ரைன் அதிபர்களிடையே நேரடி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு: ஜெலன்ஸ்கியை சந்தித்த பிறகு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா உக்ரைன் அதிபர்கள் இடையே நேரடி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும் என அறிவித்துள்ளார். நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் முயற்சித்ததை தொடர்ந்து அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தது. மூன்றரை ஆண்டுக்கும் மேலாக நீடிக்கும் இப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரமாக களமிறங்கி உள்ளார். கடந்த 15ம் தேதி வெள்ளை மாளிகையில் ரஷ்ய அதிபர் புடினுடன், டிரம்ப் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதில் எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை என்றாலும், இந்த சந்திப்பு நன்றாக நடந்ததாக இரு தலைவர்களும் கூறினர். இதைத் தொடர்ந்து, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்தார். அதில், உக்ரைனுக்கு அமெரிக்கா பாதுகாப்பு உத்தரவாதங்கள் வழங்குவது குறித்து முக்கியமாக பேசப்பட்டது. இந்த சந்திப்பை தொடர்ந்து ரஷ்ய அதிபர் புடினுடன் தொலைபேசியில் உரையாடிய டிரம்ப், போரை முடிவுக்கு கொண்டு வர விரைவில் புடின்-ஜெலன்ஸ்கி இடையே நேரடி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக அறிவித்தார்.
இந்த சந்திப்பு எப்போது எங்கு நடக்கும் என்பது உறுதி செய்யப்படவில்லை. இது ஒரு நல்ல ஆரம்பம் என டிரம்ப் தனது சமூக ஊடக பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அமெரிக்காவின் ஒருங்கிணைப்புடன் ஐரோப்பிய நாடுகளால் உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்கள் வழங்கப்படும் என்றும் டிரம்ப் உறுதி அளித்துள்ளார். டிரம்புடனான சந்திப்பு நன்றாக நடந்ததாகவும், ரஷ்ய அதிபர் புடினை நேருக்கு நேர் சந்தித்து பேச தயாராக இருப்பதாகவும் ஜெலன்ஸ்கி கூறி உள்ளார்.
இந்த நேரடி சந்திப்புக்கு ஒப்புக் கொள்வதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தவில்லை என்றாலும் ரஷ்ய அரசின் டாஸ் செய்தி நிறுவனம், ரஷ்யா, உக்ரைன் பிரதிநிதிகள் இடையேயான நேரடி பேச்சுவார்த்தைக்கு புடின் ஆதரவு தெரிவித்ததாக புடின் உதவியாளர் யூரி உஷாகோவ் தெரிவித்ததாக கூறி உள்ளது. இதனால் டிரம்ப்-புடின்-ஜெலன்ஸ்கி பங்கேற்றும் முத்தரப்பு நேரடி பேச்சுவார்த்தை எப்போது நடக்கும் என்பது உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.