போரில் கைப்பற்றப்பட்ட பாக். ராணுவ டாங்கியை ஆப்கன் தெருக்களில் ஓட்டிய தலிபான்கள்: சமூக ஊடகங்களில் வீடியோ வைரல்
காபூல்: பாகிஸ்தானுக்கு எதிரான போரில் கைப்பற்றப்பட்ட ராணுவ டாங்கிகளுடன் தலிபான்கள் ஆப்கானிஸ்தான் தெருக்களில் வலம் வந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. தங்கள் நாட்டில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு அடைக்கலம் தருவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது. இதை தலிபான்கள் மறுக்கும் நிலையில் கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இதை பாகிஸ்தான் நடத்தியதாக ஆப்கானிஸ்தான் குற்றம்சாட்டிய நிலையில் இரு நாடுகளுக்கு இடையே எல்லையில் மோதல் ஏற்பட்டது.
இதில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 58 பேர் கொல்லப்பட்டதாக தலிபான் கூறி உள்ளது. 200க்கும் மேற்பட்ட தலிபான்கள் பலியாகி இருப்பதாக பாகிஸ்தான் கூறி உள்ளது. இப்போரால் இரு நாட்டு எல்லையில் பெரும் பதற்றம் ஏற்பட்ட நிலையில், இரு தரப்பிலும் 48 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ளப்பட்டது. இதன்படி போர் நிறுத்தம் நேற்று அமலுக்கு வந்தது. இந்நிலையில், போரின் மையப்பகுதியாக இருக்கும் ஸ்பின் போல்டக் மாகாணத்தின் தெருக்களில் பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளில் தலிபான்கள் வலம் வருவது போன்ற வீடியோக்கள் சமூக ஊடகங்களில் நேற்று வைரலாகின.
இது குறித்து தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தனது எக்ஸ் பதிவில், ‘‘எல்லையில் நடந்த போரில், அதிக எண்ணிகையிலான பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் ராணுவ டாங்கிகள், ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பாகிஸ்தான் ராணுவ நிலைகள் தகர்க்கப்பட்டுள்ளன’’ என்றார்.
ஆனால் இத்தகவலை பாகிஸ்தான் மறுத்துள்ளது. பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் அளித்த பேட்டியில், ‘‘பாகிஸ்தான் ராணுவத்திடம் இருந்து கைப்பற்றியதாக கூறி வீடியோவில் காட்டப்படும் டேங்கிகள் எங்கள் ராணுவத்தில் இல்லை. அவர்கள் எங்கிருந்தோ மலிவாக வாங்கிய டேங்கியை காட்டுகின்றனர்’’ என்றார். வீடியோவில் கட்டப்படும் டேங்கி சோவித் யூனியன் காலத்தை சேர்ந்த டி-55 ரகத்தை சேர்ந்தது என்றும், அவை கடந்த 1980களில் இருந்து தலிபான் ஆயுத களஞ்சியத்தில் இருந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.