வக்பு வாரியத்திற்கு சொத்து வழங்க 5 ஆண்டு இஸ்லாமை பின்பற்றியிருக்க வேண்டுமென்ற சட்ட திருத்தத்திற்கு தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு; முழு சட்டத்தையும் நிறுத்தி வைக்கவும் மறுப்பு
புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் திருத்தப்பட்ட வக்பு வாரிய சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து திமுக, காங்கிரஸ், தவெக ஆகியவை உட்பட உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 140 வழக்குகள் தொடரப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வக்பு திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து கடந்த ஏப்ரல் 17ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து வக்பு புதிய சட்ட திருத்தம் தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட இடைக்கால தடையை நீக்குவது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் ஏ.ஜி.மாயிஷ் ஆகியோர் அமர்வில் தொடர்ந்து மூன்று நாட்கள் விரிவாக விசாரணை நடத்தப்பட்டது.
நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மே மாதம் 22ம் தேதி ஒத்திவைத்திருந்தனர். இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் ஏ.ஜி.மாயிஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று வழங்கிய தீர்ப்பு விவரம்: வக்பு சட்ட திருத்தத்தை முழுயான நிறுத்தி வைக்க எந்த முகாந்திரத்தையும் நாங்கள் காணவில்லை. இதில் ஐந்து ஆண்டுகளுக்கு இஸ்லாமியத்தை பின்பற்றி இருந்தால் தான் வக்பு வாரியத்திற்கு சொத்து வழங்க அனுமதிக்கப்படும் என்ற முக்கிய சரத்துக்கு நாங்கள் தடை விதிக்கிறோம்.
ஒருவர் இஸ்லாமிய மதத்தை பின்பற்றுபவரா என்பதைத் தீர்மானிப்பது தொடர்பான விதிகளை மாநில அரசுகள் உருவாக்கும் வரை இந்த விதி நிறுத்தி வைக்கப்படுகிறது. ஏனெனில் எந்தவொரு வழிமுறையும் இல்லாமல் இது தன்னிச்சையான அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு வழிவகுக்கும். அதேப்போன்று தனிப்பட்ட குடிமக்களின் உரிமைகளை முடிவெடுக்க மாவட்ட ஆட்சியரை அனுமதிக்க முடியாது. இது அதிகாரப் பிரிவினையை மீறுவதாகும். மேலும் வக்பு நிலம் தொடர்பாக தீர்ப்பாயத்தால் தீர்ப்பு வழங்கப்படும் வரை, எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக மூன்றாம் தரப்பு உரிமைகளை உருவாக்க முடியாது.
ஆட்சியருக்கு அத்தகைய அதிகாரங்களைக் கையாளும் விதிக்கு தடை விதிக்கிறோம். வக்பு வாரியத்தில் மூன்று இஸ்லாமியர் அல்லாத உறுப்பினர்களுக்கு மேல் இருக்கக் கூடாது என்றும், மொத்தத்தில் நான்கு இஸ்லாமியர் அல்லாத உறுப்பினர்களுக்கு மேல் இருக்கக்கூடாது. வக்பு வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முடிந்தவரை ஒரு இஸ்லாமியராக இருக்க வேண்டும். அதே நேரத்தில் இஸ்லாமியர் அல்லாத ஒருவரை தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்க அனுமதிக்கும் திருத்தத்தை நிறுத்தி வைக்க முடியாது என்று தீர்ப்பளித்தனர்.
தீர்ப்பின் சிறப்பு அம்சங்கள்
* ஒரு நபர் ஐந்து ஆண்டுகள் இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவராக இருந்தால் மட்டுமே வக்பு வழங்க முடியும் என்ற திருத்தத்திற்கு தடை.
* வக்பு நிலம் தொடர்பாக மூன்றாம் தரப்பு உரிமைகளை உருவாக்கும் வகையில் ஆட்சியருக்கு அத்தகைய அதிகாரங்களை வழங்குவதற்கு தடை.
* வக்பு வாரியத்தில் இஸ்லாமியர்கள் அல்லாத உறுப்பினர்கள் மூன்று பேருக்கு மேல் இருக்கக் கூடாது.
* ஒருவர் வக்பு வழங்க ஐந்து ஆண்டுகள் இஸ்லாம் மதத்தை பின்பற்ற வேண்டும் என்ற புதிய சட்ட திருத்தத்தின் சரத்துக்கு தடை.
* வக்பு வாரிய திருத்த சட்டம் 2025” முழு சட்டத்திற்கும் தடை விதிக்க முடியாது.
* சில பிரிவுகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது.