புதுடெல்லி: உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கும் வரை புதிய வக்பு சட்டத்தின் கீழ் மாநில வக்பு வாரியத்தை திருத்தி அமைப்பதில்லை என்ற தமிழக அரசின் முடிவை அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் பாராட்டியது.
வக்பு சட்ட திருத்தத்தை ஒன்றிய அரசு அமல்படுத்திய நிலையில் இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே உச்ச நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு வெளியாகும் வரையிலும் தமிழ்நாட்டில் வக்பு வாரியம் திருத்தி அமைக்கப்படாது என தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் செய்தி தொடர்பாளர் இலியாஸ் நேற்று அளித்த பேட்டியில், ‘‘இந்திய முஸ்லிம்கள் மற்றும் அனைத்து நீதி தேடும் மக்களின் சார்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் தைரியமான முயற்சிக்கு தனிநபர் சட்ட வாரியம் பாராட்டு தெரிவிக்கிறது. இதேபோன்ற முடிவுகளை எடுத்து அரசியலமைப்பின் மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக மதிப்புகளை நிலைநிறுத்த மற்ற மாநில அரசுகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறோம்’’ என கூறினார்.