Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

‘பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்’ குப்பை கொட்டுவதை தடுக்க வடிவேலு பாணியில் சுவர் விளம்பரம்

நெல்லை: ெபாது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் நடிகர் வடிவேலு பாணியில் வைத்திருக்கும் சுவர் விளம்பரம் பொதுமக்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் நாடு முழுவதும் தூய்மை பணிகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக ஒன்றிய அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி, மக்கள் கூடும் பஸ்நிலையம், ரயில் நிலையம் மற்றும் கல்வி நிறுவனங்களில் தீவிர தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இம்மாதத்தில் இரு வார தூய்மை பிரசாரம் ‘சுவச்டா பக்வாடா’ என்ற பெயரில் நாடு முழுவதும் கடந்த 17ம் தேதி தொடங்கி. அக்டோபர் மாதம் 2ம் தேதி வரை இரு வாரங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நெல்ைல மாவட்டம் மூலைக்கரைப்பட்டி பேரூராட்சியில் பொதுமக்கள், பொதுவிடங்களில் குப்பைகள் கொட்டுவதை தவிர்க்க நடிகர் வடிவேலு பாணியில் கலாய்த்து, சுவர்களில் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. வடிவேலுவின் எவர்கிரீன் காமெடிகளில் ஒன்றான ‘பேச்சு, பேச்சாத்தான் இருக்கணும்’ என்ற வரிகளை பயன்படுத்தி, பேரூராட்சி சுவர்களில் ‘இந்த இடத்துல குப்பை கொட்ட நீயும் வரக்கூடாது, நானும் வரமாட்டேன்’ என பேரூராட்சி நிர்வாகம் வடிவேலு படத்துடன் எழுதி வைத்துள்ளது.

மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி பகுதியில் சம்பந்தப்பட்ட சுவர் அருகே பொதுமக்கள் அடிக்கடி குப்பைகளையும், தென்னமட்டை, கட்டிட கழிவுகளையும் கொட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதை தடுத்திடும் வகையில் அந்த சுவரில் விளம்பர வாசகங்கள் எழுதி போடப்பட்டுள்ளன.