Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாலாஜா அரசு மகளிர் கல்லூரியில் ‘கல்லூரி சந்தை’ நிகழ்ச்சி பாடத்துடன் தொழில் செய்வதையும் தெரிந்துகொள்ள வேண்டும்

*மாணவிகளுக்கு கலெக்டர் அறிவுரை

வாலாஜா : வாலாஜாவில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் மகளிர் குழுவினர் சார்பில் கல்லூரி சந்தை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கலெக்டர் சந்திரகலா மகளிர் சுய உதவிக் குழுக்களில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களை விற்பனை செய்வதற்காகவும், கல்லூரி மாணவ மாணவிகள் சுயஉதவிக்குழு உற்பத்தி பொருட்களின் தரமேம்பாடு, விற்பனையுக்தி, விலை நிர்ணயம் போன்றவைகளை பற்றி அறிந்து கொள்ளவதற்கான கல்லூரி சந்தை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து மகளிர் குழுவினர் உற்பத்தி செய்த பொருட்களை பார்வையிட்டார். பின்னர் கலெக்டர் சந்திரகலா பேசியதாவது:

மகளிர்களின் குடும்ப பொருளாதாரம் மேம்படுத்திட சுயதொழில் செய்து பொருளாதாரத்தை ஈட்ட அரசு இப்பெண்களை கண்டறிந்து அவர்களை ஒரு குழுக்களாக உருவாக்கி சுயதொழில் செய்ய ஊக்குவிக்கிறது. இவர்களுக்கு தேவையான வங்கி கடன் மற்றும் பொருட்கள் விற்பனை தொடர்பான உதவிகள் போன்றவற்றை அரசு வழங்கி உதவி செய்கிறது.

உற்பத்தி செய்த பொருட்களை சந்தைப்படுத்திட அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களையும் வழங்கி அவர்களுடைய வாழ்க்கையை உயர்த்துவதே அரசின் முக்கிய நோக்கம்.

மகளிர் சுய உதவி குழுக்களின் விற்பனை பொருள்கள் கல்லூரி சந்தை, மதி அங்காடி போன்ற நிகழ்வுகளிலும் கிடைக்கின்றது. மேலும் இவர்கள் சென்னையில் நடைபெறும் கண்காட்சிகளிலும் கலந்து கொள்கின்றனர். கடைகளில் கிடைக்கும் மற்ற பொருட்களுக்கு இணையாக மகளிர் சுய உதவி குழுக்களின் பொருட்களை பொதுமக்கள் வாங்கி பயன்படுத்தும் வகையில் இந்த சந்தை காட்சிப்படுத்தப்படுகிறது.

கல்லூரி மாணவிகள் இதனை அறிந்து கொண்டு ஏழை பெண்கள் எவ்வாறு இணைந்து தொழில் செய்து வாழ்க்கையில் குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் ஈடுபடுகின்றனர் என்பதை கேட்டறிந்து கொள்ள வேண்டும். அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டும். இதனால் இவர்களுக்கு கிடைக்கும் வருமானம் வாழ்க்கை மேம்பாடு அரசு மேற்கொள்ளும் இத்திட்டத்தின் பயன் குறித்தும் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

பெண்கள் எவ்வாறு முன்னேற வேண்டும் சுயதொழில் செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். கல்லூரி மாணவிகள் இதுகுறித்து ஒரு திட்ட அறிக்கை தயார் செய்து சமர்ப்பிக்க வேண்டும். உங்களுடைய பாடத்துடன் இணைந்து தொழில் செய்வது குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காகத்தான் கல்லூரி சந்தை கல்லூரிகளில் மாணாக்கர்களை மையப்படுத்தி ஏற்படுத்தப்படுகிறது என்றார்.

இந்த கண்காட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களான அழகு சாதனங்கள், பொம்மை வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், கைத்தறி சேலை வகைகள், தானிய உணவு வகைகள், ஊறுகாய் வகைகள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள், அணிகலன்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டது.

தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த கண்காட்சி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்ட இயக்குனர் செந்தில்குமார், கல்லூரி முதல்வர் நசீம் கான், வாலாஜா தாசில்தார் ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.