சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: வக்பு வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக முஸ்லிம் அல்லாதவரையும் நியமிப்பதற்கு வகை செய்யும் பிரிவு 23-ஐ உச்ச நீதிமன்றம் அனுமதித்திருப்பதையும்; வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களை நியமிப்பதற்கு அனுமதி அளித்திருப்பதையும் ஏற்க முடியவில்லை. வக்பு திருத்தச் சட்டத்துக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க வேண்டும் என்றுதான் உச்ச நீதிமன்றத்தில் விசிக சார்பில் வலியுறுத்தினோம். ஏனைய மனுதாரர்களும் அதைத்தான் கோரியிருந்தனர்.
ஆனால், அதை உச்ச நீதிமன்றம் ஏற்காமல் ‘பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்’ என்பதுபோன்ற நிலைப்பாட்டை எடுத்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. வக்பு திருத்தச் சட்டத்தின் ஆபத்தான பிரிவுகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் வக்பு சொத்துகளை அபகரிப்பதற்கு பாஜ அரசு செய்த முயற்சி தற்காலிகமாக தடுக்கப்பட்டிருக்கிறது. இந்த தீர்ப்பு முழுமையான தீர்வு அல்ல, எனினும் இந்த அளவிலாவது உச்ச நீதிமன்றம் நிவாரணம் வழங்கியதே என ஆறுதல் கொள்ளும் அதே நேரத்தில் வக்பு திருத்தச் சட்டத்துக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி விசிக சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.