Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஊதிய உயர்வு தொடர்பாக 19 தொழிற்சங்க நிர்வாகிகளுடன் மின்வாரிய அதிகாரிகள் பேச்சு

சென்னை: ஊதிய உயர்வு தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் மின் வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய தலைமையகத்தில் ஊதிய உயர்வு தொடர்பாக மின் பகிர்மான இயக்குநர் மாஸ்கர்னஸ் தலைமையில் பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. இதில் 19 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அனைத்து பணியாளர்களுக்கும் அடிப்படை சம்பளத்தில் 25 சதவீதம் உயர்த்தி, ஊதிய உயர்வு வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஆரம்ப கட்ட பதவிகளான கள உதவியாளர், கணக்கீட்டாளர், தொழில்நுட்ப பணியாளர் உள்ளிட்ட பதவிகளை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இந்த கோரிக்கைகளை சேகரித்த மின்வாரிய அதிகாரிகள் அதனை நிர்வாக இயக்குநருக்கு அனுப்பி, அரசுக்கு பரிசீலனைக்கு முன்வைக்கப்படும் என தெரிவித்தனர். ஏற்கனவே, கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் இறுதி செய்யப்பட்டு 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இதையடுத்து 2023ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் ஊதிய உயர்வு வழங்கியிருக்க வேண்டும். மின் வாரிய ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று பல்வேறு தொழிற்சங்கங்கள் தொடர்ந்து மின் வாரியத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.