Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வியாபம் ஊழல் மீண்டும் பூதாகரம்; சொந்தக் கட்சிக்கு எதிராகவே போர்க்கொடி தூக்கிய உமா பாரதி: சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை

போபால்: வியாபம் ஊழல் விவகாரத்தில் சொந்தக் கட்சிக்கு எதிராகவே போர்க்கொடி தூக்கிய உமா பாரதி, இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மத்தியப் பிரதேச அரசியலை உலுக்கிய மிகப்பெரிய ஊழல்களில் ஒன்றான வியாபம் ஊழல் குறித்து அவ்வப்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகும். அரசுப் பணிகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் நடந்த கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு தொடர்பான இந்த ஊழலுடன் தொடர்புடைய பலர் மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கடந்த 2015ல் உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணை ஏற்றது. சுமார் 2,000 பேர் கைது செய்யப்பட்டனர்; மேலும் 490 பேர் மீது 2017ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சுமார் 25 முதல் 40 பேர் மர்மமான முறையில் இறந்ததாக பதிவாகியுள்ளது. தற்போது, விசாரணை மற்றும் வழக்குகள் தொடர்ந்து நடைபெறுகின்றன; ஆனால் முக்கிய குற்றவாளிகள் சிலர் தண்டிக்கப்பட்டாலும், முழுமையான நீதி இன்னும் கிடைக்கவில்லை என்று விமர்சனங்கள் உள்ளன.

இந்த ஊழலில், முன்னாள் முதல்வரும், பாஜகவின் மூத்த தலைவருமான உமா பாரதியின் பெயரும் அடிபட்டது. இந்நிலையில், நேற்று போபாலில் செய்தியாளர்களைச் சந்தித்த உமா பாரதி, வியாபம் ஊழல் விவகாரத்தில் பல அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘வியாபம் ஊழலில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லாத நிலையில், என் பெயர் எப்படிச் சேர்க்கப்பட்டது என்பது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும். யாரையோ காப்பாற்றுவதற்காக என் பெயர் பயன்படுத்தப்பட்டதா?. எனது அரசியல் வாழ்க்கையில், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆட்சி நடத்திய காலங்களில் எனது குடும்பத்தினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அவர்கள் கடுமையாக துன்புறுத்தப்பட்டனர். இருந்தாலும் நான் அரசியலை விட்டோ, பாஜகவை விட்டோ விலகப் போவதில்லை. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகள் வரை அரசியலில் இருப்பேன்’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.