Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாக்குப்பதிவு விவரங்களை 2 நாளில் வௌியிட உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: 48 மணி நேரத்துக்குள் வாக்குப்பதிவு விவரங்களை வௌியிட தேர்தல் ஆணையத்துக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு மற்றும் அதன் சதவீதங்களை 48 மணி நேரத்தில் விரைவாக வெளியிடக்கோரி ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான சங்கம்(ஏடிஆர்) என்ற அமைப்பு மற்றும் மஹூவா மொய்த்ரா ஆகியோர் தொடர்ந்த வழக்கை கடந்த 17ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜேபி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அமர்வு பிறப்பித்த உத்தரவில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்த விவகாரத்தில் வாக்குப்பதிவு விவரங்கள் அடங்கிய படிவம் 17சியை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது என்பது தீமைக்கும், தவறான செயல்பாடுக்களுக்கும் கண்டிப்பாக வழிவகுக்கும். அதனால் அது சாத்தியமில்லை என்று தேர்தல் ஆணையம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்ற கோடைக்கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மணீந்தர் சிங் சர்மா, ”படிவம் 17சி குறித்து தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு சந்தேகத்தின் அடிப்படையிலும், தேர்தல் ஆணையத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெற்று கொண்டுள்ள இந்த நேரத்தில் இதுபோன்ற மனுக்கள் எதையும் நீதிமன்றம் விசாரிக்க கூடாது.

கோடிக்கணக்கான மக்கள் வாக்கு செலுத்தி உள்ளனர். அப்படி இருக்கும்போது தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை சேதமடையாமல் இருக்க தற்போது உச்ச நீதிமன்றம் ஒரு உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

படிவம் 17சி குறித்து ஏற்கனவே விதிமுறைகள் மிக தெளிவாக இருக்கும்போது அதுகுறித்து சந்தேகங்கள் எழுப்பி தற்போது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய மனுக்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு பதிலாக குழப்பங்களையே ஏற்படுத்துகிறது என்பதால் மனுதாரரின் கோரிக்கயை நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி மற்றும் தவே ஆகியோர் வாதத்தில், ‘‘இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் 17சியின் வேலையையும், வாக்கு சதவீதங்களை சரியான நேரம் மற்றும் துல்லியமாக வெளியிட்டு இருந்தால் நாங்கள் ஏன் வழக்கு தொடரப்போகிறோம். அதற்கான அவசியமே ஏற்பட்டு இருக்காது. இதில் தேர்தல் ஆணையம் முதலில் தெரிவிப்பதற்கும், இறுதியாக வெளியிடும் வாக்கு சதவீத விவரங்களுக்கும் 6 சதவீத அளவுக்கு வித்தியாசம் வந்துள்ளது. இதனை எப்படி ஏற்க முடியும். இந்த வித்தியாசம் ஏன் முறைகேடாக நடந்து இருக்கக் கூடாது. தற்போது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் உடனுக்குடன் வாக்குப்பதிவு விவரங்களை வெளியிடுவது என்பது மிகவும் எளிதான மற்றும் சாத்தியமானதாகும்.

குறிப்பாக நாடு முழுவதும் 543 தொகுதிகள் 17சி கணக்குகளை வெளியிட்டால் 1911 ஆவணங்கள் மட்டுமே வரும். அதனை எளிதாக வெளியிடலாம். தேர்தல் என்பது ஒருமுறை மட்டும் வருவது கிடையாது. தொடர்ந்து நடைபெறும். இதில் ஐந்து கட்ட தேர்தல் முடிவடைந்து விட்டது என்பதற்கான எங்களது கோரிக்கையை நிராகரிக்கக் கூடாது. எனவே இந்த விவகாரத்தில் இடைகாலமாக ஒரு உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்“ என்று தெரிவித்தனர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் இத்தனை அவசரமாக இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது ஏன் என்று தெரியவில்லை என்று கூறினார். தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘இந்த விவகாரத்தில் சிறப்பு அமர்வாக இருக்கும் நாங்கள் எந்தவித உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை. மேலும் ஐந்து கட்ட தேர்தல் நடந்து முடிந்து நாளை (இன்று) ஆறாவது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இப்போது இடைக்காலமாக ஏதேனும் உத்தரவு பிறப்பித்தால் அது பல சிக்கல்களை உருவாக்கும். அதனால் இந்த வழக்கை கோடைக்கால விடுமுறைக்கு பின்னர் ஒத்தி வைக்கிறோம். அப்போது உரிய அமர்வு இதனை விசாரித்து இறுதி உத்தரவை பிறப்பிக்கும்” என்று தெரிவித்து விசாரணையை ஜூலை மாதத்துக்கு ஒத்தி வைத்தனர்.