Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாக்குரிமை திருட்டு

பீகார் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடக்க இருக்கிறது. இங்கு தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் வகையில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்டது. தேர்தல் ஆணையம் அறிவித்த ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என்று காரணம் கூறி 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வௌியிடப்பட்டுள்ளது. இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாஜவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். பீகார் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் 2024 மக்களவை தேர்தலில் 100 தொகுதிகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அதற்கான ஆதாரம் தங்களிடம் இருப்பதாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் டெல்லியில் தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகின்றனர். இதே போல் கர்நாடகாவில் பாஜ கள்ளவாக்குகளை சேர்த்து மக்களவை தேர்தலில் முறைகேடு செய்துள்ளதாக காங்கிரஸ் சார்பில் பேரணி நடக்கிறது.

இந்நிலையில் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் விவகாரம் குறித்து விவாதிக்க முடியாது என்று ஒன்றிய அரசு மறுத்து வருவதால் தினமும் நாடாளுமன்றம் முடங்கி வருகிறது. தேர்தல் ஆணைய அதிகார வரம்பிற்குள் வரும் விஷயங்களை நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மறுக்கிறார்.

பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்குரிமை திருடப்படுகிறது. சிறுபான்மையினர், தலித்துகள், ஆதிவாசிகள் ஆகியோர் வாக்குரிமையை இழக்கும் அபாயத்தில் உள்ளனர். இது ஜனநாயக உரிமை குறித்த பிரச்னை. எனவே நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணி வலியுறுத்துகிறது. இதற்கு முன் தேர்தல் ஆணைய விவகாரங்கள் பலமுறை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளனர்.

இதற்கிடையில் பீகார் மாநில வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை சனிக்கிழமைக்குள் சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடமாநிலத்தவரை வாக்காளர் பட்டியலில் வலுக்கட்டாயமாக சேர்க்கும் பணிகள் நடப்பதாக அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். கர்நாடகாவின் மகாதேவபுரா சட்டப்பேரவை தொகுதியில் மட்டும் 1,00,250 போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளார்.

இதை வைத்து பார்க்கும் போது இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக செயல்படுகிறதா அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு விசுவாசமாக செயல்படுகிறதா என்ற சந்தேகம் சாதாரண குடிமகனுக்கும் எழுகிறது. தேர்தல் ஆணையம் நம்பகத்தன்மையை இழக்கும் வகையில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளால் கடும் அதிருப்தியை அனைத்து தரப்பிலும் இருந்தும் பெற்றுள்ளது. ஆனால் நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. நிச்சயம் உச்சநீதிமன்றம் இந்த குளறுபடிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து நீதியை நிலைநாட்டும் என்பதில் சந்தேகமில்லை.