முதற்கட்டமாக நாளை மறுநாள் வாக்குப்பதிவு; பீகாரில் இன்று மாலையுடன் 121 தொகுதியில் பிரசாரம் ஓய்கிறது: பாஜக - இந்தியா கூட்டணி இடையே பலப்பரீட்சை
பாட்னா: பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவுக்கான அனல் பறந்த பிரசாரம் நிறைவடைந்தது. பீகாரில் மொத்தமுள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சியைப் பிடிக்கவும் கடுமையாகப் போராடி வருகின்றன. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலா 101 தொகுதிகளிலும், லோக் ஜன சக்தி (ராம்விலாஸ்) 29 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
இந்தியா கூட்டணியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மட்டும் 143 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பிரசாந்த் கிஷோரின் ‘ஜன் சுராஜ்’ கட்சி 243 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில், வரும் 6ம் தேதி (நாளை மறுநாள்) நடைபெறவுள்ள 121 தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இறுதி நாளான இன்று, தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணியின் நட்சத்திரத் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மாநில முதல்வர் நிதிஷ்குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி உள்ளிட்டோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, வன்முறையற்ற வாக்குப்பதிவை உறுதி செய்ய, தலைமை தேர்தல் ஆணையம் 500க்கும் மேற்பட்ட மத்திய ஆயுதப்படை போலீஸ் கம்பெனிகளை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. 90,712 வாக்குச்சாவடிகளிலும் இணைய வழி நேரலை மூலம் கண்காணிக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பீகாரில் 7.42 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், அவர்களில் 14 லட்சம் பேர் முதல் முறை வாக்காளர்கள் ஆவர். முதல் கட்டத் தேர்தல் நடைபெறும் 121 தொகுதிகளில் 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வரும் 11ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிவடையும் வரை வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. வரும் 14ம் தேதி அனைத்துத் தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வேலைவாய்ப்பின்மை, சாதி மற்றும் வாக்காளர் பட்டியலில் செய்யப்பட்ட மாற்றங்கள் ஆகியவை இந்தத் தேர்தலின் முடிவுகளில் முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்கவைக்குமா? அல்லது எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி ஆட்சியை கைப்பற்றுமா? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
