பீகாரில் வாக்காளர்கள் எண்ணிக்கை 7.42 கோடி என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் முடிந்த பிறகு தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் வாக்காளர்களின் எண்ணிக்கை 7.45 கோடி என குறிப்பிடப்பட்டிருந்தது. சிறப்பு தீவிர திருத்தம் முடிந்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் வாக்காளர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது எப்படி என சமூக ஊடகங்களில் காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.
இது குறித்து தேர்தல் அதிகாரிகள் நேற்று கூறுகையில்,பீகாரில் செப்டம்பர் 30ம் தேதியுடன் சிறப்பு தீவிர திருத்தம் முடிந்தது. அதன் பின்னர் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் எண்ணிக்கை 7.42 கோடி என்று அக்டோபர் 6ம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. தேர்தலின் ஒவ்வொரு கட்டத்திலும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி நாளில் இருந்து 10 நாட்களுக்கு முன்பு வரை தகுதியான வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் விதிகளில் கூறப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் அக்டோபர் 1ம் தேதியில் இருந்து ஒவ்வொரு கட்ட தேர்தலுக்கும் மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளில் இருந்து 10 நாட்களுக்கு முன்பு வரை பெறப்பட்ட விண்ணப்பங்களை தொடர்ந்து 3 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர் என்றனர். பேரவை தேர்தலில் முதல் கட்டத்திற்கான வேட்புமனு தாக்கல் தேதி அக்டோபர் 17 மற்றும் இரண்டாம் கட்டத்திற்கான தேதி அக்டோபர் 20 ஆகும்.


