நாகப்பட்டினத்தில் பரபரப்பு; மனைவியின் படிவத்தை ஸ்கேன் செய்தால் கணவர் பெயர்: எஸ்ஐஆர் குழப்பத்தால் வாக்காளர்கள் அதிர்ச்சி
நாகப்பட்டினம்: தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் இப்போது தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் என்னும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி நடைபெற்று வருகிறது. பீகாரில் தேர்தலுக்கு முன் நடந்த எஸ்ஐஆர் பணியில் சுமார் 65 லட்சம் வாக்குகள் திருடப்பட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதாரத்தோடு குற்றம் சாட்டின. இதே போல் பாஜ ஆட்சி செய்யாத மாநிலங்களில் வாக்குகள் திருட ஏதுவாக எஸ்ஐஆர் எனும் தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. விரைவில்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்ள கூடாது என திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் எஸ்ஐஆர் பணியில் நாகப்பட்டினத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம் வாக்காளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. நாகப்பட்டினம் அருகே நாகூர் கௌதியா தொடக்கப்பள்ளியில் வாக்காளர் சிறப்பு திருத்த முகாமிற்கு வந்த நாகூர் 5வது வார்டை சேர்ந்த பல்கிஸ் தனது விண்ணப்ப படிவத்தை வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் கொடுத்தார். அந்த படிவத்தை நிலை அலுவலர் பதிவேற்றம் செய்வதற்காக ஸ்கேன் செய்துள்ளார். அப்போது அந்த படிவத்தில் பல்கிஸ் என பெயர் காட்டுவதற்கு பதிலாக அவரது கணவரின் பெயரான ஹாஜா மொய்தீன் என்ற பெயர் காட்டியது.
இதை பார்த்து அங்கு இருந்த அலுவலர்கள் மற்றும் பூத் ஏஜன்டுகள் அதிர்ச்சியடைந்தனர். தவறுதலாக ஸ்கேன் செய்து இருக்கலாம் என சந்தேகப்பட்ட அதிகாரிகள் பலமுறை ஸ்கேன் செய்தனர். அப்போதும் வாக்காளர் பெயரை காட்டுவதற்கு பதிலாக வாக்காளரின் கணவர் பெயர் காட்டியுள்ளது. இதனால் அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


