தமிழகத்தில் உள்ள புதிய வாக்காளர்கள் உள்பட அனைத்து வாக்காளர்களுக்கும் அடையாள அட்டை கிடைக்க வேண்டும்: சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆதவ் ஆர்ஜூனா பேச்சு
சென்னை: புதிய வாக்காளர்கள் உள்பட அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் அடையாள அட்டை கிடைக்க வேண்டும் என சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆதவ் ஆர்ஜூனா பேசினார். வாக்காளர் தீவிர திருத்தத்தை எதிர்த்து தமிழக வெற்றி கழகம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. சென்னையில் சிவானந்த சாலையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில், தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது;
நாம் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம், ஒன்றிய அரசை எதிர்த்தும் அதே போல தேர்தல் ஆணையத்தை எதிர்த்தும். தமிழக வெற்றி கழகம் சார்பாக நடத்தப்படுகின்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கின்ற மேடைகளை சரி செய்ய வேண்டும் எனவும், அதேபோல பல்வேறு கட்டுப்பாடுகளையும் தொடர்ந்து மாறி மாறி கூறி வருகின்றனர். வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றால் அடுத்து உங்களுடைய ஆதார் செல்லுபடி ஆகாது, அதேபோல பாஸ்போர்ட் எடுக்க முடியாது என்ற நிலை வரலாம். எஸ்.ஐ.ஆரை நடைமுறைப்படுத்த வேண்டாம் என இங்கு யாரும் கூறவில்லை.
நடைமுறைப்படுத்தலாம் ஆனால் அது குறித்து ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே பொதுமக்களுக்கு வீடியோ மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்திவிட்டு அதன் பிறகு செய்திருக்கலாம். இதனை தேர்தல் ஆணையம் செய்திருக்க வேண்டும். 18 முதல் 20 வயது உடையவர்களின் வாக்குகள் பறிபோகாமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும், புதிய வாக்காளர்களுக்கும் வாக்காளர் அடையாள அட்டை கிடைக்க வேண்டும். இதுதான் நமது குறிக்கோள். இவ்வாறு அவர் பேசினார்.


