Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் நடக்கும் குளறுபடி ஜூஸ் கடையில் வேலை பார்ப்பவரை பிஎல்ஓ அலுவலராக நியமித்த தேர்தல் ஆணையம்: மகனை வைத்து வேலை பார்த்த அவலம்; பாஜ நிர்வாகி வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு

சென்னை: எஸ்ஐஆர் பணிகளில் குளறுபடி தொடரும் நிலையில், ஜூஸ் கடையில் வேலை பார்ப்பவரை பிஎல்ஓ அலுவலராக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அவரது மகனை வைத்து வேலை பார்த்த நிலையில், தமிழக பாஜ நிர்வாகி வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக, பீகாரில் நடத்தப்பட்ட நிலையில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. இதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. தமிழகத்தில் கடந்த 4ம் தேதியில் இருந்து இப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

ஆரம்பம் முதலே இதில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஏனெனறால், பெயர் முறையில் வாக்காளர் விவரங்களை கண்டுபிடிக்க வேண்டும் என்றால், ஒருவர் பெயரை போட்டு தேடினால், அந்த பெயரில் 100, 150 பெயர்கள் வருகிறது. அதில் ஒருவருடைய பெயரை கண்டுபிடிப்பது என்பது ரொம்ப கடினமாக உள்ளது. அதோடு குறிப்பிட்ட ஒரு வாக்காளரின் விவரம் பல முறை திரும்பத் திரும்ப வருகிறது. வீடு மாறி சென்றாலும் கூட அவர்கள் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையை மாற்றாமல், தேர்தல் நடக்கும் போது மட்டும் வாக்களிப்பதை மட்டும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

அப்படியிருப்பவர்கள் இந்த சிறப்பு திருத்தத்ததால் மிகவும் பாதிக்கப்படுவார்கள். காரணம், சம்பந்தப்பட்டவர்கள் வீடுகளில் இல்லாமல் வெளியூர்களுக்கு சென்றிருந்தால் கூட அவர்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் இந்த எஸ்ஐஆர் பணிகளுக்கு 77,000 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் வீடு-வீடாக சென்று, வாக்காளர் விவரங்களை சரிபார்த்து, படிவங்கள் விநியோகித்து வருகிறார்கள். இந்த பணிகளுக்கு முறையான அலுவலர்களை நியமிக்காததால் விண்ணப்ப படிவங்களை விநியோகிப்பதிலும் அதை பூர்த்தி செய்து வாங்குவதிலும் பல்வேறு குளறுபடிகள் நிலவுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட பூத் எண் 87க்கு பி.எல்.ஓ.வாக நியமிக்கப்பட்டவர் ஜூஸ் கடையில் வேலை பார்த்து வருபவர் என்றும், அவரது மகனை வைத்து இந்த பணிகளை கவனித்து வந்ததாகவும் ஆதாரத்துடன் வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி தமிழக பாஜ மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், சம்பந்தப்பட்டவரிடம் பேசிய ஆடியோ வெளியாகி வைரலாகி வருவது தேர்தல் ஆணையத்தின் குளறுபடிகள் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

* தமிழ்நாட்டில் இந்த எஸ்ஐஆர் பணிகளுக்கு 77,000 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் வீடு-வீடாக சென்று, வாக்காளர் விவரங்களை சரிபார்த்து, படிவங்கள் விநியோகித்து வருகிறார்கள்.

* எஸ்ஐஆர் பணிகளுக்கு முறையான அலுவலர்களை நியமிக்காததால் விண்ணப்ப படிவங்களை விநியோகிப்பதிலும் அதை பூர்த்தி செய்து வாங்குவதிலும் பல்வேறு குளறுபடிகள் நிலவுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.