வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த விவகாரம் திமுக தாக்கல் செய்த வழக்கு வரும் 11ல் விசாரணை: உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த நடவடிக்கைகள் விவகாரம் தொடர்பாக திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த வாரம் மனு ஒன்று கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் நடவடிக்கை ஜனநாயகத்திற்கு விரோதமானது . எஸ்.ஐ.ஆர் மூலம் பெரும் எண்ணிக்கையிலான வாக்காளர்கள் நீக்கப்படுவர் என்ற அச்சம் உள்ளது. எனவே தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும். இல்லையென்றால் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும்.
இதுகுறித்து உச்ச நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் ஆஜரான வழக்கறிஞர்கள் விவேக் சிங் மற்றும் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் தரப்பில் ஒரு முறையீடு செய்யப்பட்டது. அதில்,‘‘எஸ்ஐஆர் விவகாரம் தொடர்பாக திமுக தரப்பு தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டு விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், திமுக தாக்கல் செய்துள்ள மனுவை வரும் 11ம் தேதி அதாவது செவ்வாய்க்கிழமை பட்டியலிட்டு விசாரிப்பதாக உத்தரவிட்டார்.

