வாக்காளர் பட்டியலில் இருந்து சிறுபான்மையினரின் வாக்குகளை நீக்க பாஜக, அதிமுக முயற்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு
சென்னை: வாக்காளர் பட்டியலில் சிறுபான்மையினரின் வாக்குகளை நீக்க பாஜக, அதிமுக முயற்சி என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 'வாக்காளர் பட்டியலில் தங்களுக்கு சாதகமாக திருத்தம் செய்ய பாஜக, அதிமுக தப்புக்கணக்கு போடுகின்றன. மக்களின் வாக்குரிமையை பறிக்கும் SIR செயல்பாட்டை திமுகவினர் கண்காணிக்க வேண்டும்' என முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் முதல்வர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; "உழைக்கும் மக்கள், பட்டியல் இனத்தவர், சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்டோர் பெயர்களை S.I.R. மூலமாக, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டால் வென்றுவிடலாம் என பாஜக-அதிமுக போடும் கணக்கு தப்புக்கணக்காகத்தான் ஆகும்.
களத்தில் கழகத்தலைமை முதல் கடைக்கோடித் தொண்டர் வரை ஒருங்கிணைந்து செயல்படுவது எப்படி என்பது குறித்த பயிற்சிக் கூட்டம் 28-10-2025 அன்று காலை மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள கான்ஃப்ளூயன்ஸ் அரங்கில் உங்களில் ஒருவனான எனது தலைமையில் நடைபெறுகிறது.
இந்தப் பயிற்சிக் கூட்டத்திற்குப் பிறகு ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் பாக முகவர்கள் முதல் மாநில நிர்வாகிகள் வரை அனைவரும் ஒருங்கிணைந்து 'என் வாக்குச்சாவடி - வெற்றி வாக்குச்சாவடி' என்பதை முன்னெடுக்க வேண்டும்.
மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் S.I.R. செயல்பாட்டில் கண்காணிப்பாக இருந்து கழகத்தினர் கடமையாற்ற வேண்டும்.
'என்னுடைய வாக்குச்சாவடியில் தி.மு.க. கூட்டணியை வெற்றி பெறச் செய்வேன்' என ஒவ்வொரு கழக உடன்பிறப்பும், உறுதியேற்று, களப்பணியாற்றினால் 2026-இல் ஏழாவது முறையாக கழக ஆட்சி அமைவது உறுதி.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் தமிழ்நாடு தலைகுனியாது. தலைகுனிய விடமாட்டார்கள் கழக உடன்பிறப்புகள். அந்த நம்பிக்கையுடனும் உறுதியுடனும்தான் உங்களைச் சந்திக்க வருகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
