Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாக்காளர் பட்டியலில் தகுதியுள்ள அனைவரையும் சேர்க்க உறுதியான நடவடிக்கை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தகுதியுள்ள வாக்காளர்கள் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடந்து வருகின்றன.

வருகிற 11ம் தேதியுடன் இந்த பணிகள் நிறைவடையும். வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி கால அட்டவணைப்படி நிர்ணயிக்கப்பட்ட தேதியான வருகிற 16ம் தேதி வெளியிடப்படும். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 27.10.2025 அன்று அறிவிக்கப்பட்ட தருணத்தில் இருந்தே, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒவ்வொரு கட்டத்திலும் பங்கேற்று வருகின்றனர்.

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களுடன் தொடர்ச்சியாக இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு திரும்ப பெறப்படாத கணக்கீட்டு படிவங்களின் பட்டியல் தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு வழக்கமான அடிப்படையில் பகிரப்பட்டு வருகிறது. வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கு முன் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய வாக்காளர் பதிவு அலுவலர் நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

திரும்ப பெறப்படாத கணக்கீட்டு படிவங்களின் பட்டியல், குறிப்பிட்ட முகவரியில் இல்லாத வாக்காளர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் இரட்டைப்பதிவு செய்தவர்கள் போன்ற காரணங்களுடன் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பட்டியல் 11.12.2025 அன்று கணக்கீட்டு காலம் நிறைவடைந்த பின்னர் இறுதி செய்யப்படும்.

எனவே, அனைத்து வாக்காளர்களும் தங்களது நிரப்பப்பட்ட கணக்கீட்டு படிவங்களை கடைசி தேதி வரை காத்திருக்காமல், விரைந்து சமர்ப்பிக்க வேண்டும். ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் சமர்ப்பிக்கும் காலம் 16.12.2025 முதல் 15.1.2026 வரை ஆகும். எந்த ஒரு தகுதியான குடிமகனும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாமல், எந்த ஒரு தகுதியற்றவரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாத வகையில் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களும் உறுதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.