பீகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை எதிர்த்த மனுக்கள் 10ம் தேதி விசாரணை: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
புதுடெல்லி: பீகாரில் வாக்காளர் பட்டியலை திருத்தும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிரான மனுக்கள் வரும் 10ம் தேதி விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பீகாரில் வரும் நவம்பர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதன்படி, தகுதியான வாக்காளர்கள் பட்டியலில் சேர்ப்பதை உறுதி செய்வதோடு, தகுதியற்ற வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. இதற்காக வீடு வீடாக சிறப்பு திருத்த விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, அதை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை வரும் 25ம் தேதிக்குள் தர வேண்டுமென தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையால் தகுதியான பல லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்க நேரிடும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் தேர்தல் ஆணையத்தின் தீவிர திருத்த பணியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நேற்று நீதிபதிகள் சுதன்ஷு துலியா மற்றும் ஜோய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக, மனுதாரர்கள் சார்பாக கபில் சிபல் தலைமையிலான மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி பீகார் விவகாரம் தொடர்பான மனுக்களை உடனடியாக விசாரிக்க கோரிக்கை விடுத்தனர்.
ஆர்ஜேடி எம்பி மனோஜ் ஜா சார்பாக ஆஜரான கபில் சிபல், ‘‘நவம்பரில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் அதற்குள் வாக்காளர் பட்டியலை திருத்துவது முடியாத காரியம். எனவே தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் உடனடியாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும்’’ என்றார். மற்றொரு மனுதாரர் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ‘‘பீகாரில் சுமார் 8 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில் 4 கோடி வாக்காளர்கள் தங்கள் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இதற்கான காலக்கெடு மிகவும் குறைவானது. வரும் 25ம் தேதிக்குள் ஆவணங்களை சமர்பிக்காவிட்டால், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும்’’ என்றார். மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் ஆஜராகி, ‘‘ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அட்டைகளை ஆவணங்களாக ஏற்றுக்கொள்ளவில்லை’’ என்றார். இதைக் கேட்ட நீதிபதிகள், ‘‘தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், குறுகிய காலக்கெடு தீவிரமான விஷயமல்ல. இந்த விவகாரம் தொடர்பான மனுக்கள் வரும் 10ம் தேதி பட்டியலிடப்படும்’’ என்றனர்.