வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஜனநாயக நடைமுறையை அவமதிக்கும் செயல்: கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து
திருவனந்தபுரம்: பீகாருக்கு அடுத்தபடியாக கேரளா, தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான நடவடிக்கைகளை தொடங்க மத்திய தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது. இதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பது: கேரளா உள்ளிட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் ஈடுபடப் போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது ஜனநாயக நடைமுறையை அவமதிக்கும் செயலாகும்.
பீகாரில் இந்தத் திட்டத்தை அமல்படுத்தியதற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது. இந்த சூழ்நிலையில் இதை மற்ற மாநிலங்களிலும் அமல்படுத்த தீர்மானித்திருப்பதை சாதாரணமாக கருத முடியாது.கேரளாவில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில் சிறப்பு தீவிர திருத்தத்தை அமல்படுத்துவது சிரமம் என்று கேரள தலைமை தேர்தல் அதிகாரி தேர்தல் ஆணையத்திடம் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.ஆனாலும் பிடிவாதமாக கேரளாவில் சிறப்பு தீவிர திருத்தத்தை அமல்படுத்துவோம் என்று தேர்தல் ஆணையம் கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
