Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாக்குத் திருட்டு பிரசாரத்தால் காங்கிரசுக்கு நெருக்கடி; ராகுல், கார்கே மீது சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு: கட்சியின் பதிவை ரத்து செய்யக் கோரிக்கை

புதுடெல்லி: வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடப்பதாகக் கூறி ‘வாக்குத் திருட்டு’ என்ற பிரசாரத்தை முன்னெடுத்த காங்கிரஸ் கட்சி, அதன் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், அக்கட்சியின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. சமீபத்தில், கர்நாடக மாநிலத்தின் வாக்காளர் பட்டியல் தரவுகளை மேற்கோள் காட்டி, பாஜகவும் தலைமை தேர்தல் ஆணையமும் இணைந்து குற்றவியல் மோசடியில் ஈடுபடுவதாக மக்களவை எதிர்கட்சி தலைவரான காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

‘வாக்குத் திருட்டு’ என்பது இந்திய ஜனநாயகத்தின் மீதான அணுகுண்டு என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார். இதைத் தொடர்ந்து, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள், ராகுல் காந்தியிடம் முறைகேடாகச் சேர்க்கப்பட்டதாக அவர் நம்பும் வாக்காளர்களின் பெயர்களை ஆதாரத்துடன் வழங்குமாறு கேட்டுக் கொண்டனர். மேலும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், பிரமாண பத்திரத்தில் உரிய ஆதாரம் சமர்ப்பிக்காவிட்டால், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் செல்லாதவை என்று கருதப்படும் எனவும் எச்சரித்திருந்தார்.

இந்தச் சூழலில், அகில இந்திய இந்து மகாசபையைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர், காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைவர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், ‘காங்கிரசின் வாக்குத் திருட்டு பிரசாரம் அரசியல் உள்நோக்கம் கொண்டது; தலைமை தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகும். ஜனநாயக அமைப்புகள் மீதான நம்பிக்கையைச் சிதைக்கும் திட்டமிட்ட பிரசாரம் காங்கிரசால் நடத்தப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடப்பதாகக் கூறி ‘வாக்குத் திருட்டு’ என்ற பிரசாரத்தை முன்னெடுத்த காங்கிரஸ் கட்சி, அதன் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் காங்கிரஸ் கட்சியின் பதிவை ரத்து செய்ய வேண்டும். வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். சுயாதீன தணிக்கை முடியும் வரை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை நிறுத்த வேண்டும். வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வாக்காளர் பட்டியல்களை அனைவரும் எளிதில் ஆய்வு செய்யும் வகையில் வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்.’ என்றும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், விரைவில் விசாரணை நடத்தவுள்ளது.