வாக்குத் திருட்டு குறித்து ராகுல் முழங்கிய நிலையில் காங். மூத்த தலைவருக்கு 2 வாக்காளர் அட்டையா?பாஜக வெளியிட்ட தகவலால் பரபரப்பு
புதுடெல்லி: வாக்கு திருட்டு குறித்து ராகுல் முழங்கி வரும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவருக்கே டெல்லியில் இரண்டு வாக்காளர் அட்டைகள் இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. பாஜகவும் தேர்தல் ஆணையமும் இணைந்து மக்கள் தீர்ப்பைத் திருடுவதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. இந்த நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, வாக்குத் திருட்டு தொடர்பாக தங்கள் கட்சி ஒரு ‘ஹைட்ரஜன் குண்டு’ போன்ற தகவலை வெளியிடத் தயாராகி வருவதாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.
பெங்களூருவின் மகாதேவபுரா தொகுதியில் ஒரு அணுகுண்டை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளதாகவும், அடுத்ததாக வரப்போகும் ஹைட்ரஜன் குண்டுக்கு பாஜக தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் சவால் விடுத்திருந்தார். இந்த குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையமும், ஆளும் பாஜகவும் தொடர்ந்து மறுத்து வந்தன. ராகுல் காந்தியின் எச்சரிக்கை வெளியான அடுத்த நாளே, ஆளும் பாஜக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் ஊடகம் மற்றும் விளம்பரப் பிரிவின் தலைவரான பவன் கேராவுக்கு, புதுடெல்லி மற்றும் ஜங்புரா ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் இரு வாக்காளர் அடையாள அட்டைகள் இருப்பதாக பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாளவியா குற்றம்சாட்டியுள்ளார். அதற்கான புகைப்பட ஆதாரங்களையும் அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ‘சோனியா காந்தி குடும்பத்திற்கு நெருக்கமானவரே, தேர்தல் சட்டங்களை மீறியுள்ளார். இதுகுறித்து தேர்தல் ஆணையம் உடனடியாக விசாரிக்க வேண்டும்.
உண்மையான ‘வாக்குத் திருடர்கள்’ காங்கிரஸ்தான். தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் திருத்தப் பணிகள் தங்களது முறைகேடுகளை அம்பலப்படுத்திவிடும் என்ற அச்சத்தில்தான் அவர்கள் இதுபோன்ற பொய்ப் புகார்களைக் கூறுகின்றனர்’ அவர் கடுமையாகச் சாடியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகையில், ‘பவன் கேரா தனது பழைய வாக்காளர் அட்டையை ஒப்படைக்க நீண்ட காலத்திற்கு முன்பே விண்ணப்பித்துவிட்டார்; இதுகுறித்து அவர் விரைவில் பதிலளிப்பார்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.