Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: பீகாரில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில், அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணமாக ஆதார் அட்டையையும் சேர்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அக்டோபர் மாதம் இறுதியில் பீகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற சூழலில் பீகார் மாநிலத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 65 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும் வரைவு வாக்காளர் பட்டியலையும் கடந்த மாதம் 1ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்த நிலையில் பீகார் வாக்காளர் தீவிர திருத்த பட்டியல் விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. முன்னதாக இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ‘‘ஆதார் அட்டையையும் வசிப்பிட ஆவணமாக இணைத்து பதியலாம் என்றும், அதேப்போன்று பீகார் வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களை சேர்க்கும் பணியில் தன்னார்வலர்கள் உதவிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜாய்மால்யா பாக்‌ஷி ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ‘‘நாடு முழுதும் ஆதார் அட்டையை ஆவணமாக பெறும் நிலையில், பீகார் வாக்காளர் தீவிர சிறப்பு திருத்தப் பட்டியல் விவகாரத்தில் விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க ஆதார் அட்டையை பெற தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுத்து வருகிறது. குறிப்பாக முன்னதாக கூறிய 11 ஆவணங்களை மட்டுமே பெற முடியும் என்று பிடிவாதமாக உள்ளது.

இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை என்பதால் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேப்போன்று ஆதார் எண்ணை 12 வது ஆவணமாக சேர்க்க வேண்டும் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ‘‘வாக்காளர் தீவிர சிறப்பு திருத்த பட்டியல் விவகாரத்தில் ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக பெற முடியாது. ஏனெனில் சட்டமன்ற உறுப்பினரை தேர்வு செய்யும் வாக்காளர், இந்திய குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும். அதில் எந்தவித சமரசமும் செய்ய முடியாது.

குறிப்பாக ஆதார் அட்டையை முகவரி சான்றாக மட்டுமே ஏற்க முடியும் என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘வாக்காளர் தீவிர சிறப்பு திருத்த பட்டியல் விவகாரத்தில், வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ஆதார் அட்டையை பெறுவதாக அறிவித்துவிட்டு, தற்போது அதனை மறுத்து தேர்தல் ஆணையம் நிராகரிப்பது ஏன். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் வாதங்கள் முன்னுக்கு பின் முரணாக உள்ளது.

குறிப்பாக ஆதார் என்பது பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிம் போன்று ஆதாரபூர்வமான ஆவணம் தானே அதனை பெற உங்களது என்ன தயக்கம் என்று கேள்வியெழுப்பினர்.இதையடுத்து உத்தரவில்,\\” வாக்காளர் தீவிர சிறப்பு திருத்த பட்டியல் விவகாரத்தில் விடுபட்டவர்கள் விண்ணப்பிக்கும் விதமாக ஆதார் அட்டையை ஆவணமாக ஏற்க வேண்டும். ஏனெனில் ஆதார் அட்டை என்பது ஒரு நபரின் அடையாள அட்டை என்று ஆதார் சட்டமே தெளிவாக கூறியுள்ளது.

எனவே, ஆதார் அட்டையை வாக்காளர் பெயர் சேர்ப்புக்கான அடையாள ஆவணமாக பெற வேண்டும். ஏற்கனவே தேர்தல் ஆணையம்அறிவித்துள்ள 11 ஆவணங்களுடன் 12வது ஆவணமாக ஆதார் அட்டையை சேர்ந்து, அது தொடர்பாக அறிவிப்பை தேர்தல் ஆணையம் உடனடியாக வெளியிட வேண்டும். இது பற்றி பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள், தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.

அப்போது குறுக்கிட்ட தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர்,\\” ஆதார் அடையாளத்திற்காக ஏற்றுக்கொள்ளப்படும் என்பதற்கான வழிமுறைகளை இன்றைக்குள்(நேற்று) வெளியிடுவோம் என நீதிபதிகள் முன்னிலையில் தெரிவித்தார். இதையடுத்து வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

* மற்றொரு வழக்கில் நோட்டீஸ்

வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், கேரளா மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் உடனடியாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் தொடர்ந்த வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் மேற்கண்ட ஐந்து மாநிலங்கள் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.